சர்ச்சைக்குள்ளான ட்வீட்: சித்தார்த் விளக்கம்

By செய்திப்பிரிவு

சமீபத்தில் தனது ட்வீட் சர்ச்சைக்குள்ளானது குறித்து சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிவதாக கூட்டாக அறிவித்தனர். இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இருவருடைய பிரிவுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன.

இந்தச் சமயத்தில் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், "பள்ளியில் ஆசிரியரிடமிருந்து நான் கற்ற முதல் பாடங்களில் ஒன்று, "ஏமாற்றுபவர்கள் செழிப்பதில்லை. உங்கள் பாடம் என்ன?" என்று பதிவிட்டார்.

உடனே, இணையவாசிகள் பலரும் இவர் சமந்தா குறித்துதான் மறைமுகமாக ட்வீட் செய்துள்ளார் என்று தெரிவித்தார்கள். ஏனென்றால், சித்தார்த் - சமந்தா இருவருமே சில வருடங்களுக்கு முன்பு காதலித்துப் பின்னர் பிரிந்துவிட்டார்கள். இதனால்தான் சித்தார்த்தின் ட்வீட் பெரும் வைரலானது.

தற்போது சித்தார்த், சர்வானந்த் இருவரும் இணைந்து நடித்துள்ள 'மகா சமுத்திரம்' திரைப்படம் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சித்தார்த். அப்போது வைரலான ட்வீட் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

தனது ட்வீட் குறித்து சித்தார்த் கூறியிருப்பதாவது:

"ஒவ்வொரு நாளும் என் மனதில் தோன்றும் விஷயங்களை நான் ட்வீட் செய்கிறேன். என் வீட்டுக்கு வெளியே திரியும் நாய்கள் குரைப்பதைப் பற்றி நான் ட்வீட் செய்தால், அது அவர்களைப் பற்றியதுதான் என்று மக்கள் நினைக்கின்றனர். நான் அதற்குப் பொறுப்பாக முடியாது".

இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE