முடிவுக்கு வந்தது விமல் - தயாரிப்பாளர் சிங்காரவேலன் பிரச்சினை

By செய்திப்பிரிவு

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த விமல் - தயாரிப்பாளர் சிங்காரவேலன் இருவருக்கும் இடையே பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

'பசங்க', 'களவாணி' உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தவர் விமல். இப்போது பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், 'மன்னர் வகையறா' என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்ததில் சிக்கலில் மாட்டிக்கொண்டார். இந்தப் படத்திலிருந்து விமல் மற்றும் சிங்காரவேலன் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினைக்குப் பின்பு வெளியான விமல் படங்கள் அனைத்துமே, பல்வேறு கட்டப் போராட்டத்துக்குப் பின்பே வெளியானது. தற்போது விமல் - தயாரிப்பாளர் சிங்காரவேலன் இருவருக்கும் இடையிலான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக விமல் கூறியிருப்பதாவது:

"சிங்காரவேலனுக்கும் எனக்கும் எனது படங்கள் தொடர்பாக சில பிரச்சினைகள் இருந்தன. அவை எனது அடுத்தடுத்த படங்கள் சரியான சமயத்தில் வெளியாவதற்குத் தடைக்கற்களாக இருந்தன.

தற்போது அவற்றைச் சட்டரீதியாகவும் பரஸ்பரப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாகவும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் எந்தத் தலையீடும் செய்வதில்லை என முடிவு செய்துள்ளோம்.

மேலும், தொடர்ந்து நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு படங்களில் நடிப்பேன். அதுமட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கு எந்தவித சங்கடங்களையும் தராத, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் விரும்பும் ஹீரோவாக இனி என்னுடைய திரைப் பயணம் தொடரும்".

இவ்வாறு விமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE