முதல் பார்வை:  முகிழ் 

By உதிரன்

செல்லப்பிராணி மீதான மகளின் அச்சம் களைந்து, துயரம் துடைக்கும் பெற்றோரின் கதையே ‘முகிழ்’.

நாய் என்றாலே பயந்து தூரச் செல்கிறார் காவ்யா (ஸ்ரீஜா). அந்த பயத்தைப் போக்குவதற்காக செல்லமாக வீட்டில் வளர்க்க ஒரு நாய்க்குட்டியை வாங்கி வருகிறார் அவரது தந்தை விஜய் சேதுபதி. ரெஜினா, விஜய் சேதுபதி, ஸ்ரீஜாவுடன் நாய் விரைவிலேயே ஒட்டிக்கொள்கிறது. மூவரும் அன்புடன் கொஞ்சுகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீஜா பள்ளித் தோழிக்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொடுக்க வெளியே செல்கிறார். அந்த நேரத்தில் அந்தச் செல்ல நாயும் பின்தொடர்கிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது. அந்தச் சம்பவம் என்ன, அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே திரைக்கதை.

விஜய் சேதுபதி, ரெஜினா, ஸ்ரீஜா, அயர்ன் கடைக்காரர் மருதுபாண்டியன் என நால்வர் மட்டுமே பிரதான பாத்திரங்கள். விஜய் சேதுபதி வழக்கம் போல் இயல்பான தகப்பனாக நடித்துள்ளார். ஸ்ரீஜாவுக்கு நடிப்புக் கலை இன்னும் கைவரப் பெறவில்லை. அவர் நடிப்பதற்கான ஸ்கோப் இருந்தும் தவறவிட்டுள்ளார். ரெஜினாதான் படத்தில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். மகள் மீதான பாசம், அழுத்தத்திலிருந்து மகளை மீட்க நினைப்பது என தாய்க்கே உரிய பக்குவமான நடிப்பில் மிளிர்கிறார். பாசமிகு நபராக மருதுபாண்டியன் கவனிக்க வைக்கிறார்.

விஜய் சேதுபதியின் வீட்டுக்குள் கேமராவை ஒளித்துவைத்துப் படம் எடுத்தது போல் இருக்கிறது. எடிட்டர் கோவிந்தராஜ் தனக்கு வேலை மிச்சம் என்று நினைத்துவிட்டார்போல. அப்படியே காட்சிகளை அனுமதித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதனும் இஷ்டத்துக்கும் விட்டுள்ளார். ஆனால், அந்த நீளத்தைப் பார்வையாளர்களால்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திரைக்கதையில் இல்லாத உணர்வைப் பெண் இசையமைப்பாளர் ரேவா கடத்தியுள்ளார். பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் என்றாலும் அலுப்பு தட்டாத அளவுக்கு ஒளிப்பதிவாளர் சத்யா கோணங்களில் ஈர்க்கிறார்.

குறும்படமாக எடுக்க வேண்டியதை நீட்டி முழக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன். இந்தக் கதைக்கு ஏன் ஒரு மணி நேரம் என்று தெரியவில்லை. செல்லப் பிராணிகள் வைத்திருப்பவர்கள் கூட இதில் உருகி மருகி நிற்க முடியாது. இதற்கு இடைவேளை விட்டது அதீதம். ஊகிக்கக்கூடிய காட்சிகளுடனேயே முடிவது படத்தின் பலவீனம். ஓடிடி தளங்கள் உள்ள சூழலில் ஒரு மணி நேரப் படத்தைத் திரையரங்குகளில் வெளியிட்டு, அதிருப்தியை அளவில்லாமல் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE