டபுள் மீனிங் படங்கள்தான் தமிழில் அதிகம் வருகின்றன: ராதாரவி

By செய்திப்பிரிவு

டபுள் மீனிங் படங்கள்தான் தமிழில் அதிகம் வருகின்றன என்று தனது பேச்சில் ராதாரவி குறிப்பிட்டார்.

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாயோன்'. இந்தப் படத்தின் திரைக்கதையைத் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கமே எழுதியுள்ளார். என்.கிஷோர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை உள்ளிட்ட பல விஷயங்கள் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (அக்டோபர் 7) நடைபெற்றது. இதில் படக்குழுவினர், பத்திரிகையாளர்களுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இந்தியாவில் முதல் முறையாகப் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்கள் முன்னிலையில் ஆடியோ விளக்கத்துடன் டீஸர் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் ராதாரவி பேசியதாவது:

"சத்யராஜை எப்போதும் மாப்ள, மாப்ள என்றுதான் கூப்பிடுவேன். எனக்கு கரோனா என்றபோது முதலில் அவர்தான் பேசினார். சிபிராஜ் எனக்கு மருமகன். அவருடன் நடிக்கிறேன் என்றபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிபிராஜ் அப்படியே அவருடைய அப்பா மாதிரி. வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார்.

படப்பிடிப்பில் மிக எளிமையாக எல்லோருடனும் இணைந்து தங்கினார். சினிமாவில் மிக நன்றாக வருவார். இயக்குநர் எல்லாம் நடிக்க வந்துவிட்டார்கள் எஸ்.ஏ.சி, ரவிக்குமார் நன்றாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் அற்புதமாகச் செய்துள்ளார். கலை இயக்குநர் பாலசுப்பிரமணியன் பெருமாளைத் தத்ரூபமாக உருவாக்கியிருந்தார்.

தயாரிப்பாளர் அருண்மொழி படப்பிடிப்புத் தளத்துக்கு வந்ததே இல்லை, எங்களுக்கு முழு சுதந்திரம் தந்தார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக முதல் முறையாக ஒரு டீஸரை வெளியிட்டுள்ளார். அவருக்கு என் நன்றிகள். இளங்கோ செயல்களைப் பார்த்துப் பிரமித்து அவரை டப்பிங் யூனியனில் கௌரவ உறுப்பினர் ஆக்கினேன். அவர் மகன் கின்னஸ் ரெக்கார்ட் செய்திருக்கிறான்.

மாற்றுத்திறனாளிகள் கெடாமல் இருக்க, தமிழ்ப் படங்களில் ஆடியோ விளக்கம் வராமலே இருக்கலாம். டபுள் மீனிங் படங்கள்தான் தமிழில் அதிகம் வருகின்றன. அதனால் சொல்கிறேன். இளங்கோ என அவருக்குப் பெயர் வைத்தது கலைஞர் கருணாநிதி. நான் படமெடுத்தால் நீதான் பாடுவாய் என்றேன். ஆனால், நான் எப்போது படமெடுக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும். சிபிராஜ் படத்தில் இது வித்தியாசமான படமாக இருக்கும்".

இவ்வாறு ராதாரவி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE