நெட்ஃபிளிக்ஸ் ஆவணத் தொடருக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

By ஐஏஎன்எஸ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கும் ’ஹவுஸ் ஆஃப் சீக்ரெட்ஸ்: தி புராரி டெத்ஸ்’ என்கிற ஆவணத் தொடருக்கு இசையமைத்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் திரைப்படங்கள், இணையத் தொடர்கள், ஆவணப் படங்களோடு சேர்த்துப் பல வகையான ஆவணத் தொடர்களும் உள்ளன. அப்படி, சில வருடங்களுக்கு முன் டெல்லியில், மொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட புராரி குடும்பத்தினரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று தொடராக உருவாகியுள்ளது.

‘ஷப்த்’, ’பார்ச்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய லீனா யாதவ் உடன் சேர்ந்து அனுபவம் சோப்ரா இயக்கியிருக்கும் இந்தத் தொடருக்கு சர்வதேச பிரபலமான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

"ஹவுஸ் ஆஃப் சீக்ரெட்ஸுக்காக லீனா யாதவுடன் சேர்ந்து பணியாற்றியது தனித்துவமான அனுபவமாக எனக்கு இருந்தது. மிகவும் சிக்கலான, உணர்வுப்பூர்வமான பிரச்சினையை இந்தத் தொடர் பேசுவதால் இதற்காக வேறுபட்ட, நுணுக்கமான அணுகுமுறை இசையில் தேவைப்பட்டது.

பூடகமாக அதே சமயம் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு தொடரில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இதுவரை நான் செய்திராத ஒரு விஷயமாக இருந்தது" என்று ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.

ரஹ்மானின் இசை இந்தத் தொடரின் சூழலுக்கான இசையாக மட்டும் இல்லாமல் அதற்கு உணர்வுப்பூர்வமாக அதிக ஆழத்தையும் கொடுத்துள்ளது என்று இயக்குநர் லீனா குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 8ஆம் தேதி இந்தத் தொடர் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE