போதைப்பொருள் கடத்தல், சப்ளை, விற்பனை செய்யும் கும்பல்களை ஒழிக்க காவல் ஆய்வாளர் ருத்ரன் எடுக்கும் நடவடிக்கைகளும், அதன் விளைவுகளுமே 'ருத்ர தாண்டவம்'.
பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக பெட்டி கேஸுக்கு ஆளான சிறுவன் வலிப்பு வந்து இறந்துவிடுகிறார். அதற்குக் காரணம் காவல் ஆய்வாளர் ருத்ர பிரபாகரன்தான் (ரிச்சர்ட் ரிஷி) என்று மரணமடைந்த சிறுவனின் அண்ணன் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுக்கிறார். அடுத்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துகிறார். தன்னால்தான் அந்தச் சிறுவன் இறந்துவிட்டானோ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், அதனால் எழுந்த குற்ற உணர்ச்சியிலும் மனைவியின் சொல்லையும் மீறி ரிச்சர்ட் ரிஷி சரண்டர் ஆக முடிவு செய்கிறார். தொடர்ந்து போராட்டம், அரசியல் அழுத்தம் காரணமாக காவல் ஆய்வாளர் ரிச்சர்ட் ரிஷி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். சாதிய வன்மத்துடன் அவர் செயல்பட்டதாகக் கூறி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் அவர் மீது பாய்கிறது.
உண்மையில் நடந்தது என்ன, சிறுவன் செய்த தவறு என்ன, சிறுவன் மரணம் அடைந்ததன் பின்னணி என்ன, காவல் ஆய்வாளர் மீது தவறு உள்ளதா, சாதியப் பிரச்சினை தலைதூக்கியது ஏன், அரசியல் அழுத்தத்துக்கு யார் காரணம் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
'திரௌபதி' படத்தின் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட இயக்குநர் மோகன்.ஜியின் இரண்டாவது படம் 'ருத்ர தாண்டவம்'. ஆணவக் கொலை, போலிப் பதிவுத் திருமணம், நாடகக் காதல் என்று 'திரௌபதி' படத்தின் மூலம் தன் கருத்தியலைப் பதிவு செய்த விதத்தில் அதிக சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்தார். இம்முறை சாதிப் பிரச்சினையுடன் மதப் பிரச்சினையையும் கையில் எடுத்துள்ளார். அதுவும் தவறான கருத்தியலுடன் சொல்லப்பட்டுள்ளது.
திரைக்கதை வடிவத்தைப் பொறுத்தவரை 'திரௌபதி' படத்தின் அவுட்லைனே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டவர் ஜாமீனில் வெளிவருவது, கொலை செய்வது, சிறுவனின் மரணப் பின்னணி குறித்து விசாரிப்பது என அந்தப் பாணியே பின்பற்றப்பட்டுள்ளது.
முதல் படம் அதிக சர்ச்சைகளைச் சந்தித்ததன் காரணமாக இம்முறை இரண்டு லேயர்களில் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் மோகன்.ஜி. அதில் அவரது புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. வழக்கமான கதை நகர்த்தலில் உள்நோக்கம் எது என்பதையும் ஊசி போல குத்திக்கொண்டே செல்கிறார். அந்த நுட்பத்தைக் கண்டுணரும்போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது.
நாடகக் காதல், வசனம், சாதிப் பெருமிதம் இதிலும் உண்டு. அத்துடன் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்கும் சிறுவர்கள்- இளைஞர்கள், போதை சாக்லேட்டின் ஆபத்து ஆகியவை வலுவாகச் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், அத்தகைய செயல்களைச் செய்பவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை, வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதுதான் முரணாக உள்ளது. வெளிப்படையாக அதைச் சொல்லாவிட்டாலும், வடசென்னை பகுதி, ஹவுசிங் போர்டில் குடியிருக்கும் எளிய மக்களின் பிள்ளைகள் என்று காட்சிப்படுத்தப்பட்டிருப்பது உறுத்தல். எளிய மக்களில் ஒருவரையும் நல்லவராகவும், அறம் சார்ந்த மனிதராகவும் காட்சிப்படுத்தவே இல்லை.
இடையிடையே பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காகவும், ஒருதலைப்பட்சமாகவோ, யாரையும் குறிவைத்துத் தாக்கவில்லை என்பதற்காகவோ இப்படம் எடுக்கப்படவில்லை என்பதை உணர்த்துவதற்காகவும், காவல் ஆய்வாளர் ரிச்சர்ட் ரிஷி சாதி வெறியன் இல்லை என்றும், மனசாட்சியுள்ள, குற்ற உணர்ச்சி அடைகிற ஒப்புயர்வற்ற பாத்திரம் என்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. அந்தக் கதாபாத்திரம் மனிதரில் புனிதர் என்ற பிம்பத்துடன் வலம் வந்தாலும் பல சமயங்களில் அது இயக்குநரின் குரலாகவே ஒலிக்கிறது. ''பொண்ணுங்க புதுசா பழகுறவங்ககிட்ட எச்சரிக்கையா இருக்கணும், யார் எது சொன்னாலும் உடனே நம்பி அவங்க வலையில விழாம ஜாக்கிரதையா இருக்கணும்'', ''நான் என் வேலையை மட்டும்தாண்டா பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னைப் போய் சாதி வெறியன்னு ஊரலெல்லாம் பேசவெச்சு, எதுக்கு இந்த கேவலமான அரசியல்'' என்று காவல் ஆய்வாளர் பேசுவது இரு சோறு பதங்கள். தருமபுரிக்காரன் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது. தன் மீதான பிம்பத்தைக் கட்டுடைக்கவே காவல் ஆய்வாளர் பாத்திரத்தை இயக்குநர் பயன்படுத்திக் கொண்டார் என்பதை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆங்காங்கே வசன வெட்டுகள் உள்ளன. தணிக்கைத் துறை இன்னும் மதம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அக்கறை காட்டி இருக்கலாம் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும். இவற்றைத் தாண்டி எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது என்கிற கருத்தைப் பொதுக் கருத்தாக்க முயன்றுள்ளார் இயக்குநர் மோகன்.ஜி. எங்கேயோ நடந்த ஒருசில தவறான உதாரணங்கள, சம்பவங்களை வைத்துக்கொண்டு அதைப் பொதுக் கருத்தாக வைப்பது எந்த விதத்தில் சரியாகும்? ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பேசாமல், அவர்களின் சமூக நீதிக்குப் பாடுபடாமல், சமூக விடுதலையைப் பேசாமல் புறக்கணிப்பது ஏற்புடையதல்ல.
சிறுவனின் மரண விவகாரத்தை அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று சொல்வதற்காக அரசியல் கட்சிகளில் எதிரும் புதிருமான இரு தலைவர்களின் சாயலில் உள்ள நடிகர்களையே நடிக்க வைத்துள்ளார். ஆனால், அந்த நடுநிலைவாதம் எடுபடவில்லை. இவற்றையெல்லாம் தாண்டி மதரீதியான விமர்சனத்தையும் செய்வது சர்ச்சைக்குரிய பேசுபொருள் ஆகியுள்ளது. மதம் மாறுவது என்பது தனிப்பட்ட உரிமை என்ற நிலையில், அப்படி மதம் மாறுபவர்கள் தொடர்ந்து இந்துக்களாகவே பலன்களை அனுபவிக்கிறார்கள் என்று இந்துத்துவக் கருத்தியலை முன்வைக்கிறார். கிறித்தவ மதத்துக்கு மாறுவதை மிக காட்டமாக விமர்சிக்கிறார். அது வழக்கறிஞர் உட்பட பலரின் வாதத்திலும் வெளிப்படுகிறது.
விதை, நெல் ஆகிய ஒப்பீட்டுடன் பணம்தான் பிரதானம், காணிக்கையை அதிகமாகக் கொடுங்கள் என்பதை கிறித்தவ மத போதகர் ஒருவர் சொல்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையின் உச்சம். இந்துவிலிருந்து கிறித்தவ மதத்துக்கு மாறுபவர்களைத் தோலுரித்துக் காட்டுகிறேன் என்று அவர்களை காட்டமாக விமர்சித்துள்ளது தவறானது. காவல் நிலைய ரைட்டராகப் படம் முழுக்கப் பயணிக்கும் தம்பி ராமையாவின் மதத்தைக் குறிப்பிட்டும், அவர் சரியானவரா என்று துணை ஆணையரே சந்தேகப்படும்படியான கேள்வியை முன்வைக்கும் ஆபத்தும் படத்தில் உள்ளது. இவை மத மோதல், மதம் மாறியவர்களில் போலிகள் என சர்ச்சை, பிரச்சினைகள் வெடிக்க வேராக இருந்துவிடக் கூடாது என்ற பதற்றமும் தொற்றிக் கொள்கிறது.
காவல் ஆய்வாளராக ரிச்சர்ட் ரிஷி யதார்த்தமான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அடக்கமாக நடித்துள்ளார். கள்ளம் கபடமற்ற நபர் என்பதை நிறுவும் விதத்தில் நடிப்பில் டிஸ்டிங்கன் வாங்குகிறார். குற்ற உணர்ச்சி, நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம், மனைவி- குழந்தை மீதான பாசம், அரசியல் பின்னணி அறிந்து கோபப்படுவது என தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். காவல் ஆய்வாளர் என்பதற்கான கம்பீரம், மிடுக்கு மிஸ் ஆகிறது. புத்திசாலித்தனமான விசாரணைப் படலங்களும் படத்தில் இல்லை. அப்படி அவரது பாத்திரமும் வார்க்கப்படவில்லை.
ரிச்சர்ட் ரிஷியின் அன்பு மனைவியாக தர்ஷா குப்தா வழக்கமான நாயகிக்குரிய பங்களிப்பில் குறை வைக்கவில்லை. திடீரென்று கணவனை எச்சரிப்பது, தன் பேச்சைக் கேட்காததால் விட்டுப் பிரிவது, குழந்தையைக் கூட பார்க்கவிடாமல் தடுப்பது என அவரும் வீராங்கனைக்கான பாத்திர வார்ப்பில் இயல்பைத் தொலைத்துள்ளார்.
தம்பி ராமையாவின் நடிப்பு அவ்வளவு கச்சிதம். வாய்ப்பு கிடைக்கிற இடங்களில் கண்ணீர் மல்கி மனதில் இடம் பிடிக்கிறார் தீபா. ராதாரவி அனுபவத்தை அப்படியே நடிப்பில் இறக்கி வைத்து சபாஷ் பெறுகிறார். இவ்வளவு கதாபாத்திரங்களுக்கு இடையிலும், மாரிமுத்து சோடை போகவில்லை. ராமச்சந்திரன் துரைராஜ் வழக்கமும் பழக்கமுமான வில்லனாக வந்துபோகிறார். மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரன், மாளவிகா அவினாஷ், ஜெயம் எஸ்.கே. கோபி ஆகியோரும் பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர்.
கௌதம் மேனன் நடிப்பு மட்டும் தனித்து நிற்கிறது. ஸ்டைலிஷான நடிப்புக்காகவும், ஸ்கோப்புக்காகவும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதைக் கண்டுகொள்ள முடிகிறது. நின்ற இடத்தில் இருந்தே அரசியல் காய்களை நகர்த்துவது, பிரச்சினையைப் பெரிதாக்குவது, தவறு என்றதும் சமாதானமாகி ஒப்புக்கொள்வது எனத் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். அதுவும் கௌதம் மேனன் - ரிச்சர்ட் ரிஷி உரையாடல்கள் தனி கவனம் பெறுகின்றன. ஸ்வீட் ஹார்ட், டார்லிங் என்றெல்லாம் பேசி வசைபாடிக் கொள்கிறார்கள். கௌதம் மேனன், கட்சிக்காரனை எச்சரிக்கும்போதும், தம்பி ராமையாவிடம் ரகசியம் அறியத் தாக்கும் போதும் விடும் குத்துகள் மட்டும் செயற்கையாக, காமெடியாக உள்ளன.
ஃபரூக் பாஷாவின் ஒளிப்பதிவு போதை உலகத்தையும், கடத்தல் காட்சிகளையும் சரியாகப் பதிவு செய்துள்ளது. தேவராஜின் எடிட்டிங், ஜூபின் இசை ஆகியவை படத்துக்கு பலம்.
படத்தின் நீதிமன்றக் காட்சிகள் விறுவிறுப்பாகச் செல்கின்றன. எதிர்த்தரப்பில் சொல்லப்படும் காரணங்கள், அதற்கான சான்றுகளில் சுவாரஸ்யங்கள் நீள்கின்றன. போதையால் ஏற்படும் சீரழிவுகளை விழிப்புணர்வு தரும் வகையில் பதிவு செய்துள்ளார். ஆனால், அதற்கு உள்நோக்கம் கற்பிக்காமல் இருந்திருக்கலாம். அம்பேத்கர் குறிப்பிட்ட சமூகத்துக்கான தலைவர் அல்ல. அவர் எல்லோருக்குமான பொதுவான தலைவர் என்பதை அழுத்தமாகச் சொன்ன விதம் மட்டும் ஆறுதல்.
படத்தின் முக்கியமான காட்சியில் யாரும் நட்பாவே இருந்துடக்கூடாதா என்ற தொனியில் ராதாரவி கேட்கிறார். இந்தக் கேள்வி நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago