'லால் சிங் சட்டா' பட வெளியீட்டை ஆமிர் கான் தள்ளி வைத்ததன் காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

தனக்கு ராசியான கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்துக்கு தனது 'லால் சிங் சட்டா' படத்தின் வெளியீட்டை ஆமிர் கான் ஒத்தி வைத்துள்ளார். இதற்கான காரணம் குறித்து பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). இது ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது. தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கான 'லால் சிங் சட்டா'வில் ஆமிர் கான் நடித்துள்ளார்.

கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து தற்போது வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. ஆனால், பாலிவுட்டின் முக்கிய சந்தையாகக் கருதப்படும் மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ஆமிர் கான் உட்படப் பல நடிகர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் திரைப்படங்களை வெளியிடாமல் காத்துக் கொண்டிருந்தனர்.

தற்போது அடுத்த மாதம் 22-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வருடம் மீதமிருக்கும் 3 மாதங்களும், அடுத்த வருடமும் பாலிவுட்டிலிருந்து வெளியாகவிருக்கும் முக்கியத் திரைப்படங்களின் வெளியீடு குறித்த அட்டவணை வெளியானது.

இதில் 'லால் சிங் சட்டா' திரைப்படம் 2022, பிப்ரவரி மாதம் காதலர் தின வார இறுதியில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாகத் தனது படங்களை கிறிஸ்துமஸ் வார இறுதியில் வெளியிடும் வழக்கத்தை ஆமிர் கான் வைத்திருக்கிறார். ஆனால், இம்முறை கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்திய அணியின் 1983 உலகக் கோப்பை வெற்றிப் பயணத்தைச் சொல்லும் '83', ஷாகித் கபூரின் 'ஜெர்ஸி', ரோஹித் ஷெட்டி, ரன்வீர் சிங் இணையின் 'சர்க்கஸ்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

எனவே தனது படமும் வெளியானால் போட்டி அதிகமாகி எந்தப் படத்துக்கும் சரியான திரையரங்குகள், காட்சிகள் கிடைக்காத நிலை வரும் என்பதை மனதில் கொண்டே ஆமிர் கான் 'லால் சிங் சட்டா' வெளியீட்டை ஒத்திவைத்துள்ளார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம், திரையரங்குகள் திறக்கப்பட்டால், யார் எவ்வளவு காலமாகக் காத்திருக்கிறார்கள் என்பதை வைத்து ஏற்கெனவே ஒரு வெளியீட்டு அட்டவணை முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆமிர் கான் தனக்கு முன்னால் காத்திருப்பவர்களுக்கு வழிவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE