மாதவனின் 'ராக்கெட்ரி' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மாதவன் இயக்கி, நடித்திருக்கும் 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி மாதவன் எடுத்திருக்கும் படம் 'ராக்கெட்ரி'. ஏப்ரல் 1 அன்று ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பும் கிடைத்தது.

தற்போது 2022, ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி ’ராக்கெட்ரி’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "அதிக அன்பு, அர்ப்பணிப்புடன் இந்தப் படத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். நீங்கள் இதுவரை எங்களுக்குக் கொடுத்த அத்தனை ஆதரவுக்கும் நன்றி கூறிக்கொள்கிறோம்" என்று மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பகிர்வில் குறிப்பிட்டுள்ளார்.

மாதவனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.

முன்னதாக, 2021, ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தன்று படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட மாதவன், "சமூகத்துக்காகப் பங்காற்றியவர்களைத்தான் நாம் கொண்டாட வேண்டும். தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று அவர்கள் கலங்குவதில்லை. ஆனாலும், அவர்கள் கவனிக்கப்படாமல், அங்கீகாரமின்றி இருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு அநீதியும் இழைக்கப்படுகிறது. அது இந்த ஒட்டுமொத்த தேசத்துக்கே இழைக்கப்படும் அநீதியாகும்.

ஒரு முறை நம்பியுடன் நான் உரையாடியபோது, ’தேசப்பற்றினால் பாதிக்கப்பட்டு முட்டாளானவர்கள் இன்னும் எவ்வளவு பேர்!’ என்று என்னிடம் கேட்டார். முட்டாள்கள் தினத்தில், உயர்ந்த, கவனம் பெறாத நம்பி நாராயணன் என்கிற நாயகரைப் போற்றுவதன் மூலம், அப்படியான முட்டாள்களுக்கு எங்கள் காணிக்கையைச் செலுத்தி இந்த நாளை அர்ப்பணிக்கிறோம்.

கடவுள் அவரையும், அவரைப் போல இந்த உலகை இன்னும் சிறப்பானதாக ஆக்கும் போற்றப்படாத நாயகர்களையும் ஆசிர்வதிக்கட்டும்" என்று பகிர்ந்திருந்தார். அடுத்த வருடம் இதே தேதியில் படமும் வெளியாகவிருப்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE