'தளபதி 66' படத்துக்கு தமன் இசையமைப்பாரா?

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய்யின் அடுத்த தமிழ் - தெலுங்கு திரைப்படத்துக்குத் தமன் இசையமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அப்போது இதற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமானார். ஆனால், இந்தப் படம் கைவிடப்பட்டது.

இதன் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இசை அனிருத். ஆனால், இதன் பிறகு ட்விட்டரில் ஒரு பயனர் "விஜய்யுடன் உங்கள் கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாமா" என்று கேட்டதற்கு, இசையமைப்பாளர் தமன் "ஆம்" என்று பதிலளித்திருந்தார்.

தற்போது தெலுங்கின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக விஜய் நடிக்கிறார். 'தோழா', 'மஹரிஷி' படங்களின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இதனை இயக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படம் என்பதால் இப்போதைக்கு 'தளபதி 66' என்று அழைக்கின்றனர்.

இந்தப் படத்தின் குழு இன்னும் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகவிருப்பதால் தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன் இந்தப் படத்துக்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருந்த படத்தில் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் இயக்குநர் ஷங்கர், ராம் சரண் தேஜாவை வைத்து இயக்கும் படத்துக்குத் தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவருக்கே இந்த வாய்ப்பு கிடைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்று துறையில் உள்ளவர்கள் ஊகிக்கின்றனர்.

'பீஸ்ட்' படப்பிடிப்பை முடித்தபிறகு அடுத்த வருட ஆரம்பத்தில் தளபதி 66 படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பாலகிருஷ்ணாவின் 'அகண்டா', மகேஷ்பாபுவின் 'சர்காரு வாரி பாடா', பவன் கல்யாணின் 'பீம்லா நாயக்', சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' உள்ளிட்ட படங்களுக்குத் தமன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE