செய்திகள் என்னை பாதிப்பதில்லை: நாக சைதன்யா

By செய்திப்பிரிவு

தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் என்னை பாதிப்பதில்லை என்று நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் நட்சத்திர ஜோடி நாக சைதன்யா - சமந்தா. 2017-ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். சமீபமாக இருவரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.

தனது சமூக வலைதளப் பக்கங்களின் பெயரிலிருந்து நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி என்ற வார்த்தையை சமந்தா நீக்கினார். இதிலிருந்துதான் இந்தச் செய்தி பெரும் வைரலாகப் பரவத் தொடங்கியது. இது தொடர்பாக இருவருமே அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, 'லவ் ஸ்டோரி' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள் தொடர்பான கேள்விக்கு நாக சைதன்யா கூறியிருப்பதாவது:

"நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலேயே என் தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாகத்தான் வைத்துள்ளேன். இரண்டையும் கலந்ததே இல்லை. நான் வளரும்போது இதை என் பெற்றோரிடம் கற்றுக்கொண்டேன். அவர்கள் வீட்டிற்கு வந்தபின் வேலையைப் பற்றிப் பேசமாட்டார்கள். வேலைக்குச் செல்லும்போது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசமாட்டார்கள். இந்தச் சமநிலையை அவர்கள் சரியாகப் பேணுவதை நான் கவனித்திருக்கிறேன்.

ஆனால், பார்வையாளர்களை அதிகரிப்பதற்காகச் செய்திகள் பயன்படுத்தப்படும்போது ஆரம்பத்தில் சற்று வருத்தமாக இருந்தது. ஏன் பொழுதுபோக்கு என்பது இந்த திசையில் செல்கிறது என்று யோசித்தேன். அதன்பின், இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்திக்குப் பின் இன்னொரு செய்தி, இன்றைய செய்தி நாளை இறந்துவிடும். நாளை மற்றொரு செய்தி. இப்படியான சூழல் உருவாகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டேன்.

என் தாத்தா இருந்த காலகட்டத்தில் பத்திரிகைகள் மாதம் ஒருமுறை வந்தன. அடுத்த செய்தி வரும் வரை அந்தச் செய்தி மட்டுமே இருக்கும். ஆனால், இன்று ஒவ்வொரு விநாடியும், நிமிடமும் புதுப்புதுச் செய்திகள் வந்து பழைய செய்திகளின் இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. மக்களின் மனதில் அவை நீண்ட காலம் நிலைப்பதில்லை. உண்மையிலேயே செய்திக்கான மதிப்பு என்றிருக்கும் விஷயம் மட்டுமே மக்கள் மனதில் நிற்கும். டிஆர்பிக்களுக்காக வரும் செய்திகள் மறக்கப்பட்டுவிடும். இதைப் புரிந்த பிறகு, இந்த விஷயம் என்னை பாதிப்பதில்லை".

இவ்வாறு நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE