இந்த வளர்ச்சிக்கான முழு தகுதி எனக்குக் கிடையாது: விஜய் ஆண்டனி

By செய்திப்பிரிவு

இந்த வளர்ச்சிக்கான முழு தகுதி எனக்குக் கிடையாது என்று விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலுக்குப் பிறகு மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வந்த படம் 'கோடியில் ஒருவன்' என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தது படக்குழு. இந்த விழாவில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நாயகன் விஜய் ஆண்டனி பேசியதாவது:

"இப்போது என்னவாக இருக்கிறேனோ, அதற்கான முழு தகுதி எனக்குக் கிடையாது. சரியாகப் படிக்க மாட்டேன், ஆனால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசை. டாக்டர், இன்ஜினீயர் ஆக வேண்டுமென்றால் படித்து நல்ல மார்க் எடுக்க வேண்டும். ஆகையால், அம்மாவை ஏமாற்றுவதற்கு சினிமாவுக்குப் போகப் போகிறேன் என்று சொல்லி வந்தேன்.

நாட்கள் ஆக ஆக ரொம்ப நம்பிக்கையுடனே பேச ஆரம்பித்தேன். ஆனால், எனக்கு முறையான நடிப்பு, இசை என எதுவுமே தெரியாது. நம்பிக்கையுடன் பேசிப் பேசி இப்போது உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

உண்மையில் இன்றைய நாயகன் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்தான். எப்போதுமே ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் நாயகன் இயக்குநர்தான். சினிமாவுக்குக் கதை எழுதுவது என்பது ஒரு கருவைச் சுமப்பது மாதிரி. 'பிச்சைக்காரன்' கதையை என்னிடம் சொன்னபோது இயக்குநர் சசி அழுதார். அப்படியென்றால் எழுதும்போது எப்படி அழுதிருப்பார். அந்தப் படத்தில் வரும் விஜயராகவன் ஆனந்த கிருஷ்ணன்தான்.

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் ஜெயித்ததில் மகிழ்ச்சி. அட்லி, லோகேஷ் கனகராஜ் மாதிரி விஜய், அஜித்தை வைத்து வெற்றிகரமான படங்களை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான அத்தனை தகுதிகளும் ஆனந்த கிருஷ்ணனுக்கு உண்டு".

இவ்வாறு விஜய் ஆண்டனி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE