முதல் பார்வை: கோடியில் ஒருவன்

By செய்திப்பிரிவு

ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒருவன் என்ன ஆகிறான் என்பதே 'கோடியில் ஒருவன்' படத்தின் கதை.

அம்மாவின் ஆசையால் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. சென்னையில் இவர் தங்கியிருக்கும் இடத்தில் உள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விலகியே இருக்கிறார். ஆனாலும், வில்லன்களுடன் தொடர்ச்சியாக மோதல் ஏற்படுகிறது. இறுதிக்கட்ட நேர்காணலுக்குச் செல்லும்போது வில்லன் ஆட்களுடன் ஏற்பட்ட பிரச்சினை பெரிதாகிவிடுகிறது. இதற்குப் பின்பு விஜய் ஆண்டனி ஐஏஎஸ் ஆனாரா, அம்மாவின் ஆசையை நிறைவேற்றினாரா, வில்லன் ஆட்களை எப்படி எதிர்கொண்டு ஜெயித்தார் என்பதுதான் 'கோடியில் ஒருவன்' திரைக்கதை.

ஒரு அம்மாவின் சபதம், அதை முடிக்க நினைக்கும் மகன், அவருக்கு வரும் தடைகள் எனப் பழைய கதையைக் கொஞ்சம் தூசு தட்டி புதிது போல் கொடுத்துள்ளார் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன். கதை தொடங்கும் விதம், விஜய் ஆண்டனி சென்னை வருவது, அவருக்கும் வரும் பிரச்சினைகள், அவர் ஒதுங்கிப்போவது என வழக்கமான காட்சியமைப்புகளாக இருந்தாலும் பெரிதாக போரடிக்கவில்லை. ஒரு சின்ன ஏரியாவிலிருந்து அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் லாபம், அங்கு நடக்கும் அரசியல், ரவுடியிசம் எனக் கொஞ்சம் பழைய படங்களின் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறார் இயக்குநர்.

ஆனால், படத்தின் நாயகன் தோற்பது மாதிரியான காட்சிகள் வைத்த விதம் பாராட்டுக்குரியது. ஒரு கவுன்சிலரால் என்னவெல்லாம் செய்ய முடியும், அதற்கு என்ன தடைகள் எப்படி வரும் என்று காண்பித்த விதம் புதுமையாக இருந்தது. தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத சில அரசியல் விஷயங்களைத் தொட்ட விதத்துக்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

படத்தின் நாயகனாக விஜய் ஆண்டனி. சில காட்சிகளில் ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கிறார். சில எமோஷனல் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். ஆனால், வீரமாக வசனம் பேசும்போது, பாரதியார் கவிதை, மக்களுக்குக் கஷ்டம் என்று வரும்போது உருகுவது போன்ற காட்சிகள் இவருக்குச் சுத்தமாக எடுபடவில்லை.

நாயகனுக்கு அடுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் அவருடைய அம்மாவாக திவ்ய பிரபா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு முதல் படம் என்றாலும் நன்றாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகி ஆத்மிகா நடிக்கவில்லை என்றாலும் கதையில் பெரிதாக எந்தவொரு பாதிப்புமே இருந்திருக்காது. அந்த அளவுக்குத்தான் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபாகர், ராமச்சந்திர ராஜு, சூப்பர் சுப்பராயன், சூரஜ் பாப்ஸ் என வில்லன்களைப் பார்த்தாலே பயமுறுத்தும் விதத்தில் வடிவமைத்துள்ளார்கள். அவர்களும் கதைக்கு ஏற்றவகையில் அற்புதமாக நடித்துள்ளனர். முக்கியமாக சூரஜ் பாப்ஸை வரும் காலங்களில் நிறைய படங்களில் வில்லனாகப் பார்க்கலாம். படத்தின் தொடக்கக் காட்சிகளில் வரும் வில்லனாக பூ ராமு நடித்துள்ளார். இப்படியொரு வில்லத்தனமா என்று ஆச்சரியப்படுத்துகிறார்.

சென்னை, கம்பம் எனப் படத்தின் காட்சியமைப்புக்குத் தேவையான ஒளிப்பதிவை பிரமாதப்படுத்தியுள்ளார் உதயகுமார். குறிப்பாக எஸ்.எஸ்.தோட்டம் காட்சியமைப்புகள், அவ்வளவு குறுகலான இடத்திலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் 'சில நாள் கருவில்' பாட்டு அற்புதமாக உள்ளது. இதர பாடல்கள் எல்லாம் சுமார் ரகம்தான். படத்தின் பின்னணி இசை மற்றும் எடிட்டிங் படத்துக்குத் தடையாக அமைந்துள்ளது. குறிப்பாக எடிட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சில காட்சிகளின் பின்னணி இசை, காட்சியோடு ஒன்றாமல் அமைத்துள்ளார் ஹரிஷ் அர்ஜுன்.

படத்தின் முக்கியமான பிரச்சினையே, வில்லன்கள் எல்லாம் கச்சிதமாக இருக்கிறார்கள். நாயகன் கதைக்கு ஏற்றவகையில் அமையவில்லை. விஜய், அஜித், மகேஷ் பாபு போன்ற பெரிய கமர்ஷியல் ஹீரோக்கள் நடித்திருக்க வேண்டிய கதை இது. விஜய் ஆண்டனி நடித்திருப்பதால் சில காட்சிகளை நம்பமுடியாமல் போய்விடுகிறது. படத்தில் தேவையில்லாத காட்சிகளும் உள்ளன. நாயகன் தனது பிரச்சினையை எமோஷனல் வகையில் கையாண்ட விதம் அவ்வளவு பொருத்தமாக இல்லை.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்க்கிற ஒரு சுயேச்சை வேட்பாளர் புரட்சிகரமாகப் பேசியே அனைவரையும் வாயடைக்க வைக்கும் காட்சி, கல்லூரிக் காட்சிகள் பாதியிலேயே காணாமல் போனது, தமிழ்நாட்டையே கைக்குள் வைத்துள்ள ஒரு கட்சி, ஒரே ஒரு கவுன்சிலர் பின்னால் ஏன் போகவேண்டும் என லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கம்.

மொத்தத்தில் நல்லவர்களுக்கு நல்லதும், கெட்டவர்களுக்குக் கெட்டதும் நடக்கும் என்ற பாணியில் ஒரு கமர்ஷியல் படத்தைப் பார்க்கப் பிடிக்கும் என்றால் 'கோடியில் ஒருவன்' படம் உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். வித்தியாசமான கதைகளைத் தேடிப் பார்ப்பவர்களுக்கு இந்தப் படத்தால் ஏமாற்றம் ஏற்படலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE