இந்தியர்களின் சட்டவிரோதக் குடியேற்றத்தைப் பற்றிப் பேசும் ஷாரூக்- ராஜ்குமார் ஹிரானி திரைப்படம்

By செய்திப்பிரிவு

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாரூக் கான் நடிக்கவிருக்கும் திரைப்படம், வெளிநாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேற முயலும் இந்தியர்களைப் பற்றிய கதையாக இருக்கும் என்று பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2018ஆம் ஆண்டு 'ஜீரோ' திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஓய்வில் இருந்த நடிகர் ஷாரூக் கான் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஏற்கெனவே 'வார்' இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' என்கிற படத்தில் நடித்து வரும் ஷாரூக் கான், அட்லி இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்துள்ளார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு '3 இடியட்ஸ்', 'முன்னாபாய்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்தில் ஷாரூக் கான் நடிக்கவுள்ளார். இது ஆக்‌ஷன் படமாக இல்லாமல், சமூகப் பிரச்சினைகளைப் பேசும் படமாக இருக்கும் என்று தெரிகிறது.

குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்திலிருந்து பல்வேறு இளைஞர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேற முனைகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாகச் செல்ல முடியாத இவர்கள், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்டு அங்கிருந்து அமெரிக்கா அல்லது பிரிட்டன் நாடுகளில் குடியேறுகின்றனர். இதுகுறித்த புலனாய்வு அறிக்கையே வெளியாகியுள்ளது.

இந்தப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே ராஜ்குமார் ஹிரானியின் படம் உருவாகவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கனடாவுக்குச் செல்ல விரும்பும் ஒரு பஞ்சாபி இளைஞனின் முயற்சிகளைப் பற்றிய கதையே இது என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE