முருங்கைக்காய் காட்சி இப்போது புகழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி: பாக்யராஜ்

By செய்திப்பிரிவு

முருங்கைக்காய் காட்சி இப்போது புகழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி என்று இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் தெரிவித்தார்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'முருங்கைக்காய் சிப்ஸ்'. ஸ்ரீஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, பாக்யராஜ், ஊர்வசி, யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தரண் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது:

"நம்ம தயாரிப்பாளர் ரவீந்தரை கூப்பிட்டு அவரது கஷ்டங்களைச் சொல்லச் சொன்னால், எல்லோரும் சிரிக்கும்படி சுவாரசியமாகச் சொல்வார். அவ்வளவு தடைகளைக் கடந்து வந்திருக்கிறார். தரண் தான் இன்றைய நாயகன். நான் அறிமுகப்படுத்தியவர் ஜெயித்திருப்பது மகிழ்ச்சி. மயில்சாமி செய்யும் தர்மம் இங்கே பேசப்பட்டது மகிழ்ச்சி.

மிர்ச்சி சிவா தான் நடனத்தில் எனக்கு குரு. அவர் நன்றாக காமெடி செய்கிறார். 'முருங்கைக்காய் சிப்ஸ்' என்றவுடன் முதலில் நான் எடுத்த, அந்த காட்சி ஞாபகம் வருகிறது. முருங்கைகாய் காட்சி முதலில் பலமுறை எடுக்க நினைத்து, காட்சி சரியாக மனதில் வராமல் மூன்று முறைக்கு மேல் எடுத்தேன். இப்போது புகழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி.

சாந்தனுவின் உழைப்பை அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சி. சாந்தனு நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பது தான் எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நாயகி கோயம்புத்தூர் என்பதே முதலில் தெரியாது அவர் ஆங்கிலத்தில் பேசப் போகிறார் எனத் தவிர்த்துவிட்டேன் பின்னர் தெரிந்த பிறகு தமிழ் பேசும் பெண் இத்தனை ஜெயித்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் நிறைய பாஸிட்வ் எனர்ஜி இருக்கிறது. அதற்காகக் கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்"

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE