சர்ச்சைக்குள்ளாகும் நிவேதா தாமஸின் மாட்டுப் பண்ணை அனுபவம்

By செய்திப்பிரிவு

நடிகை நிவேதா தாமஸ் மாட்டுப் பண்ணைக்குச் சென்றுவந்த காணொலிப் பகிர்வால் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். தமிழில் 'பாபநாசம்', 'ஜில்லா', 'தர்பார்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் சமீபத்தில் 'வி', 'வக்கீல் சாப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

மாட்டுப் பண்ணைக்குச் சென்ற நிவேதா தாமஸ் அங்கிருக்கும் ஒரு மாட்டில் பால் கறந்து பின்பு அதை காஃபியில் கலந்து குடித்த அனுபவத்தையே காணொலியாகப் பகிர்ந்துள்ளார். மேலும் இதில் குதூகலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் லைக் கொடுத்திருந்தாலும் சில ஆர்வலர்கள் நிவேதா தாமஸை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

தீப்ஸி என்கிற விலங்குகள் நல ஆர்வலர், "நிவேதா ஒரு பெண்ணியவாதியாக இருப்பதால் இப்படி பால் கறப்பதற்கு பதிலாக சங்கிலியால் பூட்டப்பட்டிருக்கும் மிருகங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார் என்று நினைத்தேன். ஒரு பெண்ணாக இருந்து இன்னொரு இனத்தைச் சேர்ந்த பெண்ணை அவர் வதைக்கிறார் என்பது மோசமான செயல்" என்று கூறியுள்ளார்.

மற்றொரு விலங்குகள் நல ஆர்வலர் தேஜா, "காலநிலை மாற்றத்துக்கு இப்படியான பால் பண்ணைகளும், மாட்டிறைச்சி உற்பத்தித் துறையுமே பிரதான காரணங்களாக இருக்கின்றன. இவை மனிதர்கள் சாப்பிடத் தோதானது இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்படியான பெரிய தளத்தில் அப்படி ஒரு துறையை ஆதரிப்பது பொறுப்பற்றது. பிரச்சினைக்குரிய, ஆணாதிக்கச் சிந்தனைகளைத் திரைப்படங்கள் கவர்ச்சிகரமானதாக்குவதைப் போல நிவேதா இறைச்சி சாப்பிடுவதையும், பால் பண்ணைத் துறையையும் கவர்ச்சிகரமானதாக்குகிறார்" என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சைக்கு நிவேதா இன்னும் பதில் அளிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE