வடிவேலு தவிர்த்த கேள்விகள்

பத்திரிகையாளர் சந்திப்பில் சில கேள்விகளுக்கு பதிலளிக்க வடிவேலு மறுத்துவிட்டார்.

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் பிரச்சினை பேசி முடிக்கப்பட்டதால் உற்சாகமாகியுள்ளார் வடிவேலு. இதனால் அவரை மீண்டும் பல்வேறு இயக்குநர்கள் அணுகி, கதைகள் கூறிவருகிறார்கள். இதில் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

வடிவேலு - சுராஜ் கூட்டணி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார் வடிவேலு. பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குத் தனது பாணியிலேயே காமெடியாக பதிலளித்து வந்தார்.

ஆனால், இந்தச் சந்திப்பில் சில கேள்விகளை அவருடைய பாணியிலேயே தவிர்த்துவிட்டார். "தேமுதிக உடனான பிரச்சினை தொடர்பாக" என்று ஒருவர் கேள்வி கேட்கத் தொடங்கியவுடனே உஷாராகிவிட்டார் வடிவேலு. உடனே இன்னொரு புறம் திரும்பி, "நீங்கள் ஏதோ கேள்வி கேட்டீங்களே" என்று பேசத் தொடங்கினார். ஆனால், தேதிமுக கேள்வியை விடாமல் பத்திரிகையாளர் கேட்க "அந்த ஸ்விட்ச்சைக் கொஞ்சம் ஆஃப் பண்ணுங்க" என்று காமெடியாகப் பேசித் தவிர்த்துவிட்டார்.

அதேபோல், வடிவேலுவுக்குப் பிடித்த காமெடி நடிகர்கள் யார் என்ற கேள்விக்கு, "சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன்" என்று பதிலளித்தார். உடனே பத்திரிகையாளர் ஒருவர், "அப்படியென்றால் யோகி பாபு, சூரி எல்லாம் நன்றாக நடிப்பதில்லை என்கிறீர்களா?” என்று கேட்டார். உடனே, வழக்கமான தனது காமெடி பாணியில் (சிரித்துக்கொண்டே) ”ஒரு பார்ட்டி ஏழரையை இழுப்பதற்கு என்றே வந்திருக்கு இங்க" என்று தெரிவித்தார்.

இந்த இரண்டு கேள்விகள் போக 'நாய் சேகர்' தலைப்பு சர்ச்சை தொடர்பான கேள்வியைக் கேட்டவுடனே, இயக்குநர் சுராஜிடம் மைக்கைக் கொடுத்து நழுவினார் வடிவேலு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE