திரைத்துறையில் பலர் கூட்டுச் சதி செய்து தயாரிப்பாளரை அழிக்கிறார்கள்: கே.ராஜன் காட்டம்

By செய்திப்பிரிவு

திரைத்துறையில் பலர் கூட்டுச் சதி செய்து தயாரிப்பாளரை அழிக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

வோர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அடங்காமை'. இதில் அறிமுக நடிகர் சரோன், அறிமுக நடிகை பிரியா, கார்த்திகேயன், யாகவன், முகிலன், கணேஷ், ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை ஆர். கோபால் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக பி.ஜி.வெற்றி, இசையமைப்பாளர்களாக கீயூரன் மென்டிசன், எம்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் கே.ராஜன், பாடலாசிரியர் சினேகன், வனிதா விஜயகுமார், வ.கெளதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:

"படத்தில் பணியாற்றும் நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் எந்த முதலீடும் இல்லாமல் தனித்திறமையுடன் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களுக்குப் படப்பிடிப்பு தொடங்கி, இசை வெளியீடு வரை அனைத்து செலவுகளையும் செய்வது தயாரிப்பாளர்கள். படம் முடிவடைந்த பிறகு படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் ஏதேனும் சிறிய அளவிலாவது வருவாயைக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை..?!

சிறிய பட்ஜெட்டில் தயாரான இந்தப் படத்திற்கு வியாபாரம் நடைபெற்று, படத்தின் முதலீட்டில் 50 சதவீதமாவது திரும்பி வந்தால் மீண்டும் இந்த தயாரிப்பாளர் மற்றொரு திரைப்படம் தயாரிக்க முன்வருவார்.

கடந்த பத்தாண்டுகளில் குறைந்தபட்சம் ஆயிரம் தயாரிப்பாளர்களாவது திரைப்படத்தைத் தயாரித்திருப்பார்கள். இந்த ஆயிரம் தயாரிப்பாளர்களில் தற்போது திரைப்படத்தை தயாரிப்பது யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இன்றைய சூழலில் திரைத்துறையில் பலர் கூட்டுச் சதி செய்து தயாரிப்பாளரை அழிக்கிறார்கள். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு முழுமையான காரணம் இயக்குநர் தான். அத்துடன் அவர் கேட்கும்போதெல்லாம் பணத்தை வாரியிறைத்த தயாரிப்பாளரும் மற்றொரு காரணம்.

தமிழ்த் திரையுலகத்தில் முதலில் தமிழர்களுக்குத் தான் வேலை. அதற்குப் பிறகு தான் மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவேண்டும். அதில் பற்றாக்குறை ஏற்படும் பொழுது நமது சகோதரர்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என வேற்றுமொழி பேசுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம்.

இந்தத் தருணத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘தர்பார்’ படத்தின் மீது எமக்குக் கோபம் உண்டு. மும்பையில் படப்பிடிப்பு நடத்தியதால் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. இந்த விஷயத்தை தமிழ் பையனான ஏ.ஆர்.முருகதாஸ் செய்திருக்கக் கூடாது என்ற வருத்தம் எனக்கு உண்டு. 'தர்பார்' திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் எடுத்திருந்தால், என்னுடைய பெப்சி தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் பலனடைந்திருப்பார்கள்.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளிலிருந்து ஒரு குறளை எடுத்து அதனைத் தலைப்பாக்கி இருப்பதற்காக இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். தமிழில் ஏராளமான தலைப்புகள் உள்ளன. பிற மொழிகளுக்கும் தமிழிலிருந்து தலைப்புகளைத் தாராளமாக அள்ளித் தரலாம். திருக்குறள், கம்பராமாயணத்திலிருந்து ஏராளமான தலைப்புகளை எடுத்துக் கையாளலாம். கண்ணதாசனின் பாடல்களிலும் தலைப்புகள் கிடைக்கும். இதையெல்லாம் தவிர்த்து, ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது ஏன்? ஆங்கிலத்தில் தலைப்பைத் தேடுவது ஏன்? ஆங்கிலத்தில் ஒரு படத்தின் தலைப்பை வைத்தால் அந்தப் படம் ஐநூறு நாள் ஓடுமா?

கலைஞர் அவர்கள் இதற்கு ஒரு அற்புதமான திட்டத்தை முன்மொழிந்தார். தமிழில் பெயர் வைத்தால் மானியம் தருவேன் என அறிவித்தார். பல தயாரிப்பாளர்கள் இந்த சலுகையைப் பெறுவதற்காகத் தமிழில் பெயர் சூட்டினார்கள். ஆட்சி மாறியதும் இது பெரிதாக வலியுறுத்தப்படவில்லை.

திரைப்படத்திற்குத் தமிழில் பெயர் வைக்கத் தெரியாதவன் மடையன். கல்வியறிவு இல்லாதவன். ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் அதை எதிர்த்து நான் போராடுவேன். ஆங்கிலத்தில் படத்தின் தலைப்பை வைப்பவர்களை நான் வருத்தத்துடன் கண்டிக்கிறேன்.

திருக்குறளை மையப்படுத்தி சிறிய முதலீட்டில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுங்கள். ஏனெனில் தற்போது படத்தை வியாபாரம் செய்வதற்கான விநியோகஸ்தர்கள் இல்லை. கரோனா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. தொழிலைச் சீரழித்து விட்டது.

கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழில் பெயர் வைத்தால் சலுகை வழங்கப்படும் என்ற திட்டத்தை மு. க .ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை ஒரு வேண்டுகோளாகச் சமர்ப்பிக்கிறேன். திரைப்பட விருதுகள் வழங்குவது, திரைப்படங்களுக்கான மானியங்கள் வழங்குவது போன்றவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

சட்டப்பேரவையில் தமிழக முதல்வரின் செயல்பாடு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அவரது வேகமான செயல்பாடு பாராட்டுக்குரியது. அதே தருணத்தில் சினிமா கலைஞர்களின் வழிவந்த வாரிசான அவர், திரைத்துறை வளமுடன் செயல்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.. குறிப்பாகச் சிறு முதலீட்டுப் படங்கள் வெளியாவதில் உள்ள சிக்கல்களைக் குழு அமைத்துக் களைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு கே.ராஜன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE