எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்: மீடியாவை கடுமையாகச் சாடியுள்ள கீர்த்தி சனோன்

By செய்திப்பிரிவு

சித்தார்த் சுக்லா மறைவுக்கு பிறகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்வு தொடர்பாக மீடியாவை கடுமையாகச் சாடியுள்ளார் கீர்த்தி சனோன்.

‘பலிகா வாது’, ‘தில் சே தில் தக்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த் சுக்லா. 2005ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தையும் சித்தார்த் சுக்லா வென்றுள்ளார். அதன் பிறகு இந்தி 'பிக் பாஸ்' 13-வது சீசனில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்த சீசனின் வெற்றியாளரும் இவரே.

செப்டம்பர் 2-ம் தேதி திடீரென சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு சல்மான் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

செப்டம்பர் 2-ம் தேதி இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்துமே சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வந்தன. இதில் சித்தார்த் சுக்லாவின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க இருந்த புகைப்படங்களும் அடங்கும்.

சித்தார்த் சுக்லாவின் மறைவுக்குப் பிறகான புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வுக்கு மீடியாவை கடுமையாகச் சாடியுள்ளார் கீர்த்தி சனோன். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

"நம் ஊடகங்கள், புகைப்படக்காரர்கள், இணையதளங்கள் ஆகியோர் இப்படி உணர்வுக்கு மதிப்பளிக்காமல் நடந்து கொள்வதில் என் மனம் நொந்துபோகிறது. இது செய்தி அல்ல, இது பொழுதுபோக்கும் அல்ல. எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள். மனசாட்சியோடு இருங்கள். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன்.

இறுதிச் சடங்குகளுக்கு ஊடக வெளிச்சம் வேண்டாம். தனிப்பட்ட முறையில் இழப்பைச் சந்தித்து, சோர்வடைந்திருக்கும் மனிதர்கள் முகத்தில் உங்கள் கேமரா வெளிச்சத்தை அடித்து, அவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்.

இதெல்லாம் எதற்காக? சில பதிவுகளுக்காகவா? இணையதள ஊடகங்களும், சேனல்களும் கூட இந்தத் தவறைச் செய்கின்றனர். ஒரு முடிவெடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் புகைப்படங்களை, வீடியோக்களைப் பதிவேற்றாதீர்கள். இது போன்ற உணர்ச்சியற்ற பதிவுகளில், "மனமுடைந்து போனோம்" என்ற வார்த்தைகளை மட்டும் எழுதிவிட்டு உங்கள் போலி உணர்வைக் காட்டுவதை நிறுத்துங்கள்"

இவ்வாறு கீர்த்தி சனோன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE