நான் நடித்ததில் சிறந்த படம் 'தலைவி': கங்கணா ரணாவத்

By செய்திப்பிரிவு

இதுவரை தான் நடித்ததில் சிறந்த படமாக 'தலைவி' இருக்கலாம் என்று நினைப்பதாக நடிகை கங்கணா ரணாவத் பேசியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை விஷ்ணு இந்தூரி தயாரித்துள்ளார். செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த சனிக்கிழமை அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

கங்கணா, அரவிந்த்சாமி, மதுபாலா, பாக்யஸ்ரீ, தம்பி ராமையா உள்ளிட்ட படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர்.

இதில் பேசிய கங்கணா, "இந்த 2 வருடங்களில் பலரும் பலவிதமான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளனர். ஏப்ரல் மாதம் நாங்கள் படத்தை வெளியிடத் தயாராக இருந்தோம். சரியாக அப்போது இரண்டாவது அலை வந்துவிட்டது. ஆனால், மீண்டும் முயன்று இம்முறை கண்டிப்பாகத் திரையரங்குகளில் வெளியிட்டுவிடுவோம்.

தொற்றுக் காலத்துக்குப் பிறகு வெளியாகும் முதல் சில படங்களில் எங்கள் படமும் இருக்கிறது என்பதை என் அதிர்ஷ்டமாகவும், மதுபாலா சொன்னதுபோல பெருமையாகவும் உணர்கிறேன். பல தடைகள் இருந்தாலும் நம்பிக்கையுடன் இந்த முயற்சியைச் செய்யும் என் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. ஒரு குழந்தையைப் போல உற்சாகமாக இருக்கிறேன். தமிழில் இன்றிரவு பார்க்க ஆவலாக இருக்கிறேன். சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னால் இப்போது தமிழைப் புரிந்துகொள்ள முடியும். இதுவரை நான் நடித்ததில் சிறந்த படமாக இது இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால்தான் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உடன் பணிபுரிந்த அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. சிறந்த திறமைகளைக் கொண்டுவந்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் தனது இசையின் மூலம் இந்தப் படத்தை வேறொரு உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்" என்று கங்கணா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE