அன்பைப் பயன்படுத்தி உறவை மேம்படுத்துங்கள்: விஜய் சேதுபதி

அன்பைப் பயன்படுத்தி உறவை மேம்படுத்துங்கள் என்று 'லாபம்' பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லாபம்'. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டுப் படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கும் முன்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிறகு, விஜய் சேதுபதி பேசியதாவது:

"எஸ்.பி.ஜனநாதன் சாரைச் சந்தித்தது முதல் அவரது மறைவு வரையிலான இந்தக் காலகட்டம் மறக்க முடியாதது. அவருக்கும் எனக்கும் இடையிலான உறவையும் வார்த்தைகளால் குறிப்பிட இயலாது. அவரின் மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

எனக்கும் அவருக்குமான உறவு தந்தை - மகன் போன்றதொரு உறவு. அருகில் இருக்கும் பொழுது அதன் அருமை தெரியாது. தூரத்திலிருந்து நான் அவரை நேசித்துக்கொண்டே இருந்தேன். காலம் இப்படி படுபாதகமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அவரைப் பற்றித் தெரிந்திருந்தால், புரிந்து கொண்டிருந்தால் அவருடன் நிறைய நேரம் செலவிட்டிருப்பேன். அவருடன் நன்றாகப் பழகத் தொடங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் அதிகமாக அன்புப் பரிமாற்றம் நடந்திருக்க வேண்டும் எனத் தற்போது நினைக்கிறேன்.

சில நேரங்களில் மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதைப் பயன்படுத்தி இருக்கலாம். நான் அதைத் தவறவிட்டிருக்கிறேன். யாராவது உங்கள் மீது அன்பு பாராட்டினால், அவர்களை நீங்கள் புரிந்துகொண்டால், அவரிடம் சென்று நிறைய நேரத்தைச் செலவிடுங்கள். அன்பைப் பயன்படுத்தி உறவை மேம்படுத்துங்கள்.

இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் முழுப் பொறுப்பும் தலைவர் ஜனநாதனையே சேரும். இங்கு பேசும்பொழுது ஆர்.கே.செல்வமணி, ஜனநாதனின் தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றிய கதையைப் படமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் என்னுடைய அனுபவத்தின்படி ஜனநாதன் சார் ஒரு கதையை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி மாற்றி யோசித்து எழுதக்கூடிய படைப்பாளி.

ஒவ்வொரு படத்திலும் பெரும் மாற்றங்களைச் செய்துகொண்டே இருப்பார். படத்திற்காக உழைத்துக்கொண்டே இருப்பார். புதிய புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டு அதனைப் படைப்பில் இணைத்துக்கொண்டே செல்வார். அதனால் அவர் எழுதிய தஞ்சாவூர் கோயில் பற்றிய கதையைப் படமாக்குவதற்கான திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் அவர் பணியாற்றும் ஸ்டைல் எனக்குத் தெரியும்.

தினமும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அதனால் இதுதான் கிளைமாக்ஸ், இதுதான் இடைவேளைக் காட்சி, இதுதான் வசனம் என்று எந்த வரையறையும் அவரிடம் இருக்காது. அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். படப்பிடிப்பில் ஒரு வசனம் பேசியிருப்போம். அதனைப் பின்னணி பேசும்பொழுது மாற்றிப் பேச வைத்துக் காட்சியின் சுவையை மேம்படுத்தியிருப்பார். அதனால் அவரை எளிதில் கணிக்க முடியாது.

மேலும், இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்வதை விட, மறைந்த இயக்குநரும் என்னுடைய தலைவருமான இயக்குநர் ஜனநாதன் பல்வேறு பேட்டிகளில் சொன்னதை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

‘சேத்துல கால் வச்சாதான் சோத்துல கை வைக்க முடியும்’ என விவசாய பத்தி சொல்லி சுருக்கிட்டாங்க. நான் விவசாயத்தை எப்படி பார்க்கிறேன்னா, பிரிட்டிஷ்காரன் இந்தியாவுக்கு வந்ததே இந்த கிராமப் பகுதியில் நடக்கிற விவசாயத்தைப் பார்த்துதான். தங்கம் மாதிரி பொருளாய் இருந்தா அவன் எப்பவோ எடுத்துட்டுப் போய் இருக்கலாம். ஆனா, இந்த மண்ணுல முந்நூறு, நானூறு வருஷமா பருத்தியை எடுத்துக்கிட்டே இருக்காங்க. கரும்பை எடுத்துக்கிட்டே இருக்காங்க. இதுக்கு உலக அளவுல மார்க்கெட் இருக்கிறதால இன்னும் கூட எடுத்துக்கிட்டு இருக்காங்க. இந்தியா முழுக்க சுமார் 2000 சர்க்கரை ஆலைகள் இருக்கு. இவை அனைத்தும் கரும்பை மூலப்பொருளாக வைத்துதான் இயங்குது. இந்தக் கரும்பிலிருந்து வர்ற சர்க்கரை, சர்க்கரையிலிருந்து வர்ற மொலாசஸ், மொலாசஸிருந்து வர்ற ரம், ஜின், பிராந்தி, பால் கலந்த சாக்லேட், இதுல வர்ற மின்சாரம், அத தொழிற்சாலைக்குப் பயன்படுத்திய பிறகு மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்வது, கரும்பு சக்கையிலிருந்து பேப்பர் தயாரிப்பது என எல்லாமே விவசாயத்தில் இருந்துதான் கிடைக்குது.

பஞ்சாலை, கரும்பாலை என விவசாயத்திலிருந்து வர்ற எந்தப் பொருளாக இருந்தாலும் சரி வேஸ்டேஜ் அப்டின்னு ஒன்னும் இல்ல. பல நாடுகள் தங்களுடைய வேஸ்டேஜ் கொட்டுறதுக்குன்னு சில நாட்ட செலக்ட் பண்ணி பயன்படுத்தறாங்க. நம்ம நாட்டுக்கும் கன்டெய்னர் கன்டெய்னரா ஏராளமான வேஸ்ட் அனுப்புறாங்க.

அதனால விவசாயத்தை நம்பி பல தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கு. கோடிக்கணக்கான பணம் புழங்கிக் கொண்டிருக்கு. சோத்துப் பிரச்சினை இல்லை. வெளையவெச்சு பயிரிட்ட விவசாயி, அதுல உருவான பாட்டில வாங்கி குடிக்க சாய்ந்தரம் ஆனதும் க்யூவுல போய் நிற்கிறான். இது என்னுடைய உற்பத்தி செஞ்சு வர்ற பொருளிலிருந்துதான் பீராவும், பிராந்தியாவும் இங்க வித்து லாபம் சம்பாதிக்கிறாங்கன்னு விவசாயிக்குத் தெரியல. அதைத்தான் இந்தப் படம் சொல்லுது’ன்னு ஜனநாதன் சார் சொன்னார்".

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE