உணர்ச்சி மிகுதி, கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் - சூரரைப் போற்று பாடலுக்கு அமிதாப் பச்சன் புகழாரம்

By செய்திப்பிரிவு

'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பாடலைத் தனது வலைப்பூவில் பகிர்ந்து உணர்ச்சிகரமான பாராட்டைப் பதிவிட்டுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

சமூக வலைதளங்களில் பல பாலிவுட் பிரபலங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர். அதன் பயன்பாடு அதிகரிக்கும் முன்னரே தனது வலைப்பூவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமாகக் கருதப்படும் நடிகர் அமிதாப் பச்சன்.

மிக இயல்பான, யதார்த்தமான அவரது வலைப்பதிவுகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அப்படி வெள்ளிக்கிழமை காலை சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படத்திலிருந்து 'கையிலே ஆகாசம்' பாடலின் காணொலியை அமிதாப் பச்சன் பகிர்ந்திருந்தார்.

இதோடு, "சில தருணங்கள், சில தருணங்கள், நாம் நினைத்ததை விட அதிகமான உணர்வைக் கொடுக்கும் தருணங்கள் உள்ளன.

நேற்றிரவு அப்படி ஒரு தருணம் அமைந்தது. அந்த உணர்ச்சி எவ்வளவு மிகுதியாக இருந்ததென்றால் என்னால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறை அதைப் பார்க்கும்போது என் கண்கள் குளமாகின. அந்தத் தருணத்தை இன்னும் என்னால் இங்கு பகிர முடியாது. ஆனால், அதற்கான காரணம் இதோ இங்கே.

ஒரு பாடல், சூர்யா நடித்திருக்கும் படத்திலிருந்து ஒரு தமிழ்ப் பாடல். சூர்யா தென்னகத்தின் சூப்பர் ஸ்டார். திரைப்படத்தில் இந்தப் படம் நமது மனதை உருக்கிவிடும். அதை நீங்கள் இந்தக் காணொலியில் பார்க்கலாம். ஆனால் நேற்று வேறொரு சூழலில் இதைப் பார்த்தேன். இன்னும் யதார்த்தமான ஒரு சூழலில்.

அது என் கண்ணீரைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாதபடி மாற்றியது. ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உணர்வு பந்தத்தை இது தாங்கியிருக்கிறது. இதுதான் அந்தக் காணொலி" என்று பதிவிட்டதோடு பாடலில் மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளார்.

மேலும் அதன் கீழ், "இந்தப் பாடல் மிக அழகாக, ஆழமாக, மென்மையாக, மனதைத் தொடுகிறது. இதைப் பற்றிக் குறிப்பிடும்போதே உணர்ச்சிகளைக் கிளறுகிறது. இது அப்படியான ஒரு நாளாக அமைந்துவிட்டது. மற்ற தருணங்களைப் போல இன்னும் இந்தத் தருணம் நீளும் என்று எனக்குத் தெரியும்.

நான் இப்போது விடைபெறுகிறேன். ஏனென்றால் இன்னும் எழுத வேண்டும் என்று நினைத்தால் அது இன்னும் கண்ணீரை வரவழைக்கிறது. கண்ணீரைப் பகிர்ந்து கொள்வதும் ஒன்றாக இருக்கும் ஒரு உணர்வைத் தரும். புன்னகையும்தான். உங்கள் வாழ்வில் அதிக புன்னகையும், குறைவான கண்ணீரும் இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"அதே பாடல். வேறொரு காட்சியமைப்பு. ஆனால் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவையே இல்லை எனும் அளவுக்கு மிக அழகாகக் தொகுக்கப்பட்டுள்ளது. இசையின் அழகும், ஆன்மாவும் என்னவென்றால் அது அனைவருக்கும் பொதுவானது என்பதுதான். ஆத்மாவைப் பரமாத்மாவோடு இணைக்கும் கயிறு இசை" என்று இந்தப் பாடலை வைத்து ரசிகர்கள் எடிட் செய்திருக்கும் இன்னொரு காணொலியையும் அமிதாப் பச்சன் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்துக்கு ஏற்கெனவே பாலிவுட் பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் இந்தி ரீமேக் வேலைகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமிதாப் பச்சனின் இந்தப் பாராட்டு, படத்துக்கான எதிர்பார்ப்பை பாலிவுட் ரசிகர்களிடையே அதிகப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE