‘நாய் சேகர்’ தலைப்பு சர்ச்சை: மீண்டும் வடிவேலு படத்துக்குச் சிக்கல்?

By செய்திப்பிரிவு

'நாய் சேகர்' படத்தின் தலைப்பால், மீண்டும் வடிவேலு படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதால், வடிவேலு மீதான ரெட் கார்டை நீக்கிவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இதனால் தொடர்ச்சியாகப் படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார் வடிவேலு. இதில் முதல் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'நாய் சேகர்' எனத் தலைப்பிடத் திட்டமிட்டு இருந்தார்கள். இது தொடர்பாக வடிவேலு அளித்த பேட்டிகளில்கூட, படத்தின் தலைப்பைக் குறிப்பிட்டே பேசினார். ஆனால், அந்தத் தலைப்பைப் படக்குழுவினர் பெறுவதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நாயகனாக நடிக்க புதிய படமொன்று தயாரிப்பில் உள்ளது. இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர்' என்ற தலைப்பைப் பதிவுசெய்து வைத்துள்ளது படக்குழு.

வடிவேலு - சுராஜ் படக்குழுவினர் 'நாய் சேகர்' என்ற தலைப்பைப் பதிவு செய்தபோது, ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்களோ ’நாய் சேகர்’ தலைப்பை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

படத்தின் கதைப்படி பல்வேறு இடங்களில் வசனமாகவும் 'நாய் சேகர்' என்றே இடம்பெறவுள்ளது. படத்தின் தலைப்பை மாற்றினால் பல காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்ற சூழல் இருந்ததால் படத்தின் தலைப்பைக் கொடுக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தான் நடித்த புகழ்பெற்ற கதாபாத்திரத்தின் பெயர், தன் படத்துக்கே கிடைக்கவில்லையே என்று சோகத்தில் இருக்கிறார் வடிவேலு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE