தலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: நசிருதீன் ஷா

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்திருப்பது உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நசிருதீன் ஷா ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்திருப்பது உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை இந்திய முஸ்லிம்கள் கொண்டாடுவது ஆபத்து. தலிபான்களை ஆதரிப்பவர்கள் நவீனமாக்கப்பட்ட இஸ்லாமில் வாழ விரும்புகிறார்களா? அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காட்டுமிராண்டித்தன வாழ்க்கையை வாழ விரும்புகிறார்களா? என்ற கேள்விகளைத் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

நான் ஒரு இந்திய முஸ்லிம். மிர்சா காலிப் கூறியதுபோல் கடவுளுடன் எனது உறவு முறைசாரா தன்மை கொண்டது. அரசியல் சார்ந்த மதம் எனக்குத் தேவையில்லை” என்று நசிருதீன் ஷா பேசியுள்ளார்.

பின்னணி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.

ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE