கரோனா பாதிப்பால் நஷ்டம்: மிஷன் இம்பாஸிபிள் 7 தயாரிப்பாளர்களின் காப்பீடை மறுத்த நிறுவனத்தின் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

’மிஷன் இம்பாஸிபிள் 7’ திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் பாராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம், தங்களுக்குக் காப்பீடு வழங்கிய நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

கரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு ரத்தானதும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடுகட்ட முடியாது என்றும் காப்பீடு நிறுவனம் மறுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

’சப்’ என்கிற நிறுவனத்தில் பாராமவுண்ட் காப்பீடு செய்திருந்தது. கரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வெறும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே நஷ்ட ஈடாகத் தர முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது சிவில் அத்தாரிடி என்கிற பிரிவின் கீழ் மட்டுமே வரும் என்றும் கூறியுள்ளது.

ஆனால் கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரம்பாக வைத்து, நடிகர்களுக்கான காப்பீடு என்கிற அடிப்படையில் தான் பாராமவுண்ட் நிறுவனம் காப்பீடு எடுத்துள்ளது. இதன் படி டாம் க்ரூஸ், இயக்குநர் மெக்வாரி உள்ளிட்டவர்கள் உடலநலம் குன்றியோ, இறப்பதாலோ, கடத்தப்பட்டாலோ படத் தயாரிப்பில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீடை காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதத்திலிருந்து இந்த வருடம் ஜூன் வரை பல முறை இந்தப் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது. இதில் குறைந்தது 6 முறை கரோனா நெருக்கடியே இதற்உக் காரணம். மேலும் நடிகர்கள் உடல்நலம் குன்றிப் போகாமல் இருக்கவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் தாங்கள் எடுத்த காப்பீட்டின் படி தங்கள் கோரிக்கை செல்லும் என்று பாரமாவுண்ட் நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் இப்படியான பொது முடக்கம், ரத்து ஆகியவை சிவில் அத்தாரிட்டி என்கிற காப்பீடு திட்டத்தின் கீழ் தான் வரும் என்பதால் அதன் உச்ச வரம்பான 1 மில்லியன் டாலர்களை மட்டுமே தர முடியும் என்று சப் அறிவித்துள்ளது.

பாராமவுண்ட் நிறுவனம் எவ்வளவு பணத்தை கோரியுள்ளது என்பது குறித்து இன்னும் தெளிவாகவில்லை. முன்னதாக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இத்தாலி படப்பிடிப்பில் நடிகர்களில் ஒருவர் உடல்நலம் குன்றியதால் படப்பிடிப்பு ரத்தானது. இதற்காக 5 மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக சப் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் மே மாதம் 27ஆம் தேதி மிஷன் இம்பாஸிபிள் 7 வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE