சிம்பு மீதான ரெட் கார்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது எப்படி?- பின்னணித் தகவல்கள்

By செய்திப்பிரிவு

சிலம்பரசனுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு பிரச்சினை எப்படி முடிவுக்கு வந்தது என்ற பின்னணித் தகவல் வெளியாகியுள்ளது.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தைத் திட்டமிட்டபடி முடிக்கவில்லை, படப்பிடிப்புக்குச் சரியான நேரத்துக்கு வரவில்லை, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உருவாகின. இதனால் சிலம்பரசன் - மைக்கேல் ராயப்பன் இருவருக்கும் வெளியீட்டு சமயத்தில் பிரச்சினை உருவானது. படமும் படுதோல்வி அடைந்ததால் பிரச்சினை மேலும் பெரிதானது.

மைக்கேல் ராயப்பன், தேனாண்டாள் முரளி, திருப்பதி பிரதர்ஸ் போஸ் மற்றும் இன்னொரு தயாரிப்பாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று சிலம்பரசனைக் கேட்டுக்கொண்டது தயாரிப்பாளர் சங்கம். ஆனால், இதற்கு சிலம்பரசன் ஒத்துழைக்காமல் இருந்தார்.

இதனால் அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டு, ரெட் கார்டு விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலம்பரசனின் படங்களுக்குச் சிக்கல் உண்டானது. சமீபத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதிலேயே சிக்கல் உருவானது. இது தொடர்பாக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் மற்றும் மைக்கேல் ராயப்பன் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதனிடையே, தற்போது சிலம்பரசன் படங்களுக்குப் போடப்பட்ட ரெட் கார்டை நீக்கிவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இன்று (ஆகஸ்ட் 26) 'வெந்து தணிந்தது காடு' படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதால், சிலம்பரசன் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தை நேற்று இரவு நடைபெற்றது. இதில் முன்னணித் தயாரிப்பாளர்கள் மற்றும் சிலம்பரசன் தரப்பிலிருந்தும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் தேனாண்டாள் முரளி, திருப்பதி பிரதர்ஸ் போஸ் மற்றும் இன்னொரு தயாரிப்பாளர் ஆகியோருடைய பணத்துக்கு வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் பொறுப்பேற்றுள்ளார். இந்தப் பிரச்சினை தவிர்த்து சிலம்பரசனுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம்தான்.

இதன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உடனான பிரச்சினையை செப்டம்பர் 2-ம் தேதி பேசி முடித்துவிடுவோம் என்று சிலம்பரசன் தரப்பு வாக்குறுதி கொடுத்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள், சிலம்பரசன் தரப்பினர் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் பங்கெடுக்கவுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது.

இந்தப் பிரச்சினையும் சுமுகமாக முடிவு பெறும் தறுவாயில், சிலம்பரசன் படங்களுக்கு இனி எந்தவொரு பிரச்சினையுமே இல்லாத சூழல் உருவாகிவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE