எழுத்தாளராக மாறிய தமன்னா 

‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை நடிகை தமன்னா எழுதியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் 'தமன்னா'. 'தேவி', 'தர்மதுரை', 'பாகுபலி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் தமன்னா நடித்துள்ளார். பாலிவுட்டில் 'ஹிம்மத்வாலா', 'எண்டெர்டெய்ன்மெண்ட்', 'ஹம்ஷகல்ஸ்', 'துடக் துடக் துடியா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான 'நவம்பர் ஸ்டோரி' வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்ததாக 'அந்தாதுன்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘மேஸ்ட்ரோ’ படத்திலும் தமன்னா நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது எழுத்தாளராகவும் மாறியுள்ளார் தமன்னா. லைஃப்ஸ்டைல் பயிற்சியாளர் லூக் காவ்டின்ஹோ உடன் இணைந்து ‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை தமன்னா எழுதியுள்ளார். இந்தியாவின் பண்டைய வாழ்க்கை முறைகளின் மூலம் நோய்களைத் தடுப்பது, ஆயுளை நீட்டித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது பற்றிப் பேசுகிறது.

இப்புத்தகம் குறித்து தமன்னா கூறியிருப்பதாவது:

'' ‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்னுடைய முதல் புத்தகம். எனவே, அது எனக்கு மிகவும் விஷேசமான ஒரு புத்தகம். ஆனால், அதையும் தாண்டி நான் அப்புத்தகத்தை மிகவும் நம்புகிறேன். மேலும், இது அதிகமான மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தின் மூலம் நம்முடைய பண்டைய வாழ்க்கை முறைகளின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிலும் குறிப்பாக மிகுந்த அழுத்தமும், வேகமும் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் கலாச்சார அறிவே மற்ற எதனையும் விட முக முக்கியமானதாக இருக்கிறது''.

இவ்வாறு தமன்னா கூறினார்.

பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் வழங்கும் இப்புத்தகம் வரும் ஆகஸ்ட் 30 அன்று வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE