எழிலின் 'யுத்தசத்தம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிப்பில் எழில் இயக்கும் 'யுத்தசத்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

எழில் இயக்கத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘யுத்த சத்தம்’. தொடர்ந்து நகைச்சுவை பாணியிலான படங்களை மட்டுமே இயக்கி வந்த எழில் இப்படத்தின் மூலம் முதல் முறையாக த்ரில்லர் கதை ஒன்றை இயக்குகிறார். ராஜேஷ் குமார் எழுதிய ‘யுத்தசத்தம்’ க்ரைம் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஆக.23) வெளியானது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்படம் குறித்து இயக்குநர் எழில் கூறியதாவது:

'' ‘யுத்தசத்தம்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாகும். முதல் காரணம் இது என் வழக்கமான திரைப்பட பாணியிலிருந்து மாறுபட்டு, மிகவும் நேர்த்திகரமாக உருவாகும் படைப்பு. நான் இதுவரையிலும் மென் உணர்வுகளைக் கூறும் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களையே செய்து வந்துள்ளேன். ஆனால், இப்படம் மர்மம் நிறைந்த, பரபரப்பான த்ரில்லர் திரைப்படம் ஆகும்.

இது திரில்லர் வகையில் மட்டும், என் படங்களிலிருந்து மாறுபட்டதல்ல. படத்தின் உருவாக்கத்திலேயே என் படங்களிலிருந்து முற்றிலும் புதிதானதாக இருக்கும். ‘யுத்தசத்தம்’ தலைப்பு படத்தின் கதைக்குக் காரணமான ராஜேஷ்குமார் நாவலின் அதே தலைப்பாகும். படம் அவரது கதையிலிருந்து வேறுபடாமல் சிறப்பாக வந்திருப்பதாக அவர் என்னைப் பாராட்டவும் செய்தார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் திரைப்படமாக இப்படம் இருக்கும்''.

இவ்வாறு இயக்குநர் எழில் கூறினார்.

இப்படத்தில் ரோபோ ஷங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE