தமிழ் சினிமா வரலாற்றில் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்துவிட்ட முக்கோணக் காதல் கதைகளில் ஒன்றான 'காதல் தேசம்' வெளியாகி இன்றோடு (ஆகஸ்ட் 23) 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இரண்டு நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிக்க அதனால் நட்பில் ஏற்படும் விரிசல் நட்புக்கும் காதலுக்கும் இடையிலான போராட்டமாகி இறுதியில் நட்பை வெல்ல வைத்து அழகு பார்த்திருப்பார் தனிப் பாணியிலான காதல் படங்களுக்காகவே அறியப்பட்ட இயக்குநர் கதிர்.
காதலின் மேன்மையும் நட்பின் மகத்துவமும்
கல்லூரிப் பருவத்தில் வயதுக்கேயுரிய போட்டி உணர்வாலும் தத்தமது கல்லூரி சார்ந்த பெருமிதத்தாலும் பகைவர்களாகும் வெவ்வேறு வர்க்க, சமூகப் பின்னணியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பரஸ்பரம் புரிந்துகொண்டு இணைபிரியா நண்பர்களாவதும் அதன் மூலம் இரண்டு கல்லூரிகளை இணைக்கும் பெரும் நட்புக்குழாம் உருவாவதும் இப்படி உருவான நட்பு ஒரே பெண்ணை இருவரும் காதலிப்பதால் மீண்டும் பகை நோக்கிச் செல்வதும் இறுதியில் அந்தப் பெண் இருவரையும் சமமான நண்பர்களாகப் பாவிப்பதாகக் கூறி நட்பை மீட்டெடுப்பதுமாக முடியும் இந்தக் கதையில் காதலின் மேன்மை நட்பின் மகத்துவம் இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.
காதலாகிக் கசிந்துருகவும் நட்பின் குடையில் இளைப்பாறவும் வாய்ப்பளித்த எண்ணற்ற தருணங்களால் நிரம்பியிருந்த திரைப்படம் இது. 1990களின் பிற்பகுதியில் சென்னையில் பிறந்து வளர்ந்தும் சிறுநகரங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் உயர்கல்விக்காகத் தலைநகருக்குக் குடிபெயர்ந்தும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்த இளைய தலைமுறையின் வாழ்க்கை குறித்த தோற்றத்தை அளிக்கும் படமும் கூட. அதே நேரம் இந்த டிஜிட்டல் காலத்து இளைஞர்களையும் ரசிக்க வைக்கும் திரைப்படம். ஏனென்றால் இதில் கையாளப்பட்ட நட்பும் காதலும் என்றென்றும் நிலைத்திருப்பவை. அவற்றின் வடிவங்களும் வழிமுறைகளும் வேண்டுமானால் காலத்துக்கேற்ப மாற்றமடையலாம்.
உயிரோட்டம் மிக்க கல்லூரிகள்
சென்னையின் பிரபலமான இரண்டு தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் குழாமை முன்வைத்து சென்னை நகரின் குறிப்பாக நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை ஆகிய பகுதிகளை இணைக்கும் கல்லூரிச் சாலையையும் அங்கு புழங்கும் கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டமும், ஏக்கமும் கனவுகளும் கண்ணீரும் நிரம்பிய வாழ்வையும் திரையில் பதிய வைத்த திரைப்படம் 'காதல் தேசம்'. அதற்கு முன்புவரை தமிழ் சினிமாவில் கல்லூரியைக் கதையைச் சொல்வதற்கான களமாகவும் கல்லூரிக் காலத்தை வாழ்க்கையின் ஒரு பருவமாகவும் மட்டுமே பயன்பட்டுவந்த நிலையில் கல்லூரியையும் அதன் அமைவிடத்தையும் அங்கு வந்து செல்லும் மாணவர்களின் அன்றாட வாழ்க்கையும் விரிவாகவும் உயிரோட்டத்துடன் பதிவு செய்தது இந்தப்படம். கல்லூரி என்பது வெறும் கட்டிடமல்ல கல்லூரிப் பருவம் என்பது வாழ்வில் ஜஸ்ட் லைக் தட் கடந்துசெல்லக்கூடிய சிறு பகுதியல்ல என்பதை வலுவாக உணர்த்தியதாலும்தான் 'காதல் தேசம்' முக்கியமான வெகுஜனத் திரைப்பதிவாகிறது.
வெற்றிக்குத் துணை நின்ற பங்களிப்புகள்
சென்னையின் கல்லூரி சாலையைக் கற்பனை வளம் புகுத்தி இந்தப் படத்துக்காக அமைக்கப்பட்டிருந்த செட் படத்தின் வெற்றிக்கும் நீங்காப் புகழ்பெற்ற தன்மைக்கும் முக்கிய பங்களித்தது. 'ஜெண்டில்மேன்'தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் மிகப் பிரம்மாண்டமாகச் செலவழித்துப் படத்தைத் தயாரித்திருந்தார். அதன் விளைவாகப் பிரம்மாண்டமும் பளபளப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது.
இந்தப் படத்தின் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமான அப்பாஸ் தமிழ் சினிமாவின் ஆணழகன் நாயகர்களில் ஒருவரானார். இளம் பெண்களிடையே அவருக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. 'அப்பாஸ் மாதிரி அழகான மாப்பிள்ளை வேணும்' என்று பொது உரையாடல்களிலும் திரைப்பட வசனங்களிலும் பேசப்படும் அளவுக்கு அழகான ஹீராவாக அப்பாஸ் தாக்கம் செலுத்தினார்.
இந்திப் படங்களில் நடித்துவந்த தபு இந்தப் படத்தின் நாயகியாக தமிழில் அறிமுகமானார். படம் முழுக்க சுடிதாரில் தோன்றிய இவருடைய பாந்தமான அழகு ரசிகர்களை ஈர்த்தது. இவருக்கு அமைந்திருந்த முதிர்ச்சியான கதாபாத்திரத்தைச் சிறப்பாக உள்வாங்கி நடித்திருந்தார்.
'ஆவாரம்பூ', 'ஜெண்டில்மேன்', 'மே மாதம்' உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்த வினீத், இந்தப் படத்தின் இன்னொரு நாயகனாக நடித்திருந்தார். எளிய பின்னணியிலிருந்து கண்களில் கனவுகளைத் தேக்கிய இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமான தேர்வாக அமைந்திருந்தார். முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் மட்டுமில்லாமல் துணைக்கதாபாத்திரங்களில் நடித்திருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்ரீவித்யா, வடிவேலு, சின்னி ஜெயந்த் என அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருந்தனர். கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு சென்னையின் சாலைகளின் பிரம்மாண்டத்தையும் பரபரப்பையும் திரையில் கச்சிதமாகக் கொண்டுவந்தது.
'இதயம்' படத்தின் மூலம் அறிமுகமான கதிர் அந்த ஒரு படத்தில் மட்டுமே இளையராஜாவுடன் பணியாற்றினார். அடுத்த 'உழவன்' படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் கைகோத்துவிட்டார். அந்தப் படத்திலேயே சிறந்த வெற்றிப் பாடல்கள் அமைந்தன என்றாலும் கதிர்-ரகுமான் இணை முக்கியமான வெற்றிக் கூட்டணியாக உருவெடுத்தது 'காதல் தேசம்' படத்தின் மூலமாகத்தான். இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுமே வெற்றிபெற்றன. 'கல்லூரிச் சாலை'என்னும் துடிப்பான அறிமுகப் பாடல், 'என்னைக் காணவில்லையே நேற்றோடு' என்னும் நிறைவேறாக் காதலின் வலியை வெளிப்படுத்தும் பாடல், 'தென்றலே தென்றலே' என்னும் சன்னமான மெலடிப் பாடல் என இன்றுவரை இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கும் அமரத்துவம் பெற்ற பாடல்கள் இந்தப் படத்தில் அமைந்திருந்தன.
ஃபேர்வல்களின் பாடல்
'காதல் தேசம்' படத்தின் 25ஆம் ஆண்டை கொண்டாடுவதைப்போல் அதில் இடம்பெற்ற 'முஸ்தஃபா முஸ்தஃபா' பாடலின் 25ஆம் ஆண்டையும் கொண்டாடும் அளவுக்கு அது குறித்துத் தனிக் கட்டுரையே எழுதும் அளவுக்கு அந்தப் பாடல் தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்லூரி நட்பை நண்பர்களுடனான மகிழ்வான தருணங்களை, நட்பின் மகத்துவத்தை, பிரிவின் கண்ணீரைக்கொண்டாடும் 'முஸ்தஃபா முஸ்தஃபா' பாடல் பிரம்மாண்டமான கல்ட் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. தமிழகத்தில் 'சகலகலா வல்லவன்' படத்தின் 'இளமை இதோ இதோ' இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை. அதேபோல் 'முஸ்தஃபா முஸ்தஃபா' பாடல் இல்லாமல் கல்லூரி ஃபேர்வல் நிகழ்வுகள் இல்லை.
'முஸ்தஃபா' பாடலை ரகுமானே பாடியிருந்தார். அவருடைய துள்ளலான இசை மட்டுமல்லாமல் குதூகலமான குரலும் பாடலின் வெற்றிக்கு வழிகோலியது. மனதளவில் நிரந்தர இளைஞரான வித்தகக் கவிஞர் வாலியின் வரிகள் நட்பு என்னும் உணர்வ அசைபோடுவதற்கும் நண்பர்களுடனான அழகான தருணங்களை மனதில் ஓட்டிப்பார்ப்பதற்கும் உகந்த பாடலாக்கின. 'வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே' என்பதைவிட நட்பின் எல்லையற்ற தன்மையை அழுத்தமாகவும் கவித்துவமாகவும் அதே நேரம் குழந்தைக்கும் புரியும் அளவுக்கு எளிதாகவும் வரையறுக்க வேறொருவர் பிறந்துதான் வரவேண்டும்.
'முஸ்தஃபா' பாடலின் பிரம்மாண்ட வெற்றிக்கு இசை,வரிகள், குரல் ஆகியவற்றுக்கு இணையாக அதன் படமாக்கமும் பங்களித்தது. காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது, கடற்கரை ஜாகிங், பேருந்தில் எதிர்பாலினத்தவரை ரசித்துக்கொண்டே பயணம் செய்வது, கல்லூரி வகுப்புகளில் தூங்கி வழிவது, வகுப்பை கட் அடித்துவிட்டு கும்பலாக சினிமாவுக்கு செல்வது, கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்துவது என ஒவ்வொருவரின் கல்லூரி நாட்களையும் நினைவுக்குக்கொண்டுவரும் அனைத்தையும் அழகான காட்சித்துணுக்களாக அடுக்கி இந்தப் பாடலைப் படமாக்கியிருப்பார் கதிர். கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவும் லெனின் – வி.டி.விஜயனின் படத்தொகுப்பும் கல்லூரிப் பருவத்தின் சுவடுகளை அனைத்து ரசிகர்களும் கொண்டாட விதத்திலான அழகான பாடலாகக் கட்டியெழுப்பின.
இந்தப் பாடலில் 'ஓ ஓ ஓ ஓ ஓ ஒ' என்று பாடலின் சரணங்களுக்கு இடையிலும் வரும் கோரஸ் திரைக்குள்ளிருந்து மட்டுமல்ல திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் நண்பர்களுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்களிடமிருந்தும் ஒலித்தது. அந்த அளவு இந்தப் பாடல் நட்பைக் கொண்டாடும் பாடலாக அனைத்து இளைஞர்களின் தேசிய கீதமானது. தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் பாடல் இன்றளவும் இசை ரசிகர்களாலும் இளைஞர்களாலும் கொண்டாடப்படும் பாடலாகத் திகழ்கிறது.
இப்படி ஒவ்வொருவரையும் கல்லூரிக் காலத்தையும் நட்பையும் காதலையும் நினைத்து மகிழ்ச்சியில் புன்னகைக்கும் பிரிந்துசென்ற நட்புகளை நினைத்து கண்ணீர் சிந்தவும் வைத்த 'காதல் தேசம்' என்றென்றும் சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்துக்குரிய படமாக நீடித்து நிற்கும் என்பதை உறுதியாகக் கூறலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
17 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago