சிறந்த படம், சிறந்த நடிகர் விருதுகளை வென்ற 'சூரரைப் போற்று': மெல்போர்ன் திரைப்பட விழாவில் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழா விருதுகள் 2021ல், ’சூரரைப் போற்று’ சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் சூர்யா சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமாக ஆஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவின் 12-வது பதிப்பு இணையம் மூலமாக நடைபெற்றது. அனுராக் காஷ்யப், தியாகராஜ குமார்ராஜா, ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்ட இயக்குநர்கள் இதில் பங்குபெற்றனர்.

இதில் 'சூரரைப் போற்று', ’சேத்து மான்’, ’நஸீர்’, உள்ளிட்ட தமிழ் படங்கள் போட்டியிட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விழாவின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த படமாகவும், சூர்யா சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'ஷேர்னி' திரைப்படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகை விருதை வென்றார்.

ஓடிடி தளங்கள் பிரிவில் சிறந்த வெப் சீரிஸாக மிர்ஸாபூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. 'தி ஃபேமலி மேன் 2'வில் நடித்த மனோஜ் பாஜ்பாய் சிறந்த நடிகராகவும், சமந்தா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

"பரிந்துரைக்கப்பட்ட எல்லாருமே அவர்களின் சிறந்த உழைப்பைத் தந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். சூரரைப் போற்று எனக்கு மிகவும் விசேஷமான படம். இந்தப் படத்துக்காக நான் பெறும் முதல் விருது இது. எங்களுக்கு நிறைய அன்பைத் தந்த ரசிகர்களுக்கு நன்றி. 20 வருட சினிமா வாழ்க்கையில் என் வேலை சற்று சோர்வாக இருக்கும் போது இந்தப் படத்தை எனக்குத் தந்த இயக்குநர் சுதாவுக்கு நன்றி. ’

இது அவரது 10 வருடக் கனவு. இந்தப் படத்தின் திரைக்கதை எழுதவே அவர் நான்கு வருடங்கள் செலவிட்டார். மாறா கதாபாத்திரம் அவரில்லாமல் சாத்தியப்பட்டிருக்காது. இதை விட சிறந்த கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தும் இருக்காது" என்று வெற்றி பெற்ற சூர்யா பேசியுள்ளார்.

'லூடோ' படத்தின் இயக்குநர் அனுராக் பாசு சிறந்த இயக்குநர் விருதை வென்றார். 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்துக்கு சினிமாவில் சமத்துவம் என்கிற விருதும், அந்தப் படத்தில் நடித்த நிமிஷா சஜயனுக்கு சிறந்த நடிகை பிரிவில் கௌரவ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE