தனது சாதனையை சோனு சூட்டுக்கு அர்ப்பணித்த வீரர்: சோனு சூட் நெகிழ்ச்சி

By ஏஎன்ஐ

மலையேறி சாதனை படைத்த வீரர் உமா சிங் தனது வெற்றியை நடிகர் சோனு சூட்டுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறியதற்கு சோனு சூட் பதிலளித்துள்ளார்.

கடந்த வருடம் கரோனா நெருக்கடி காரணமாகப் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும் அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.

இதோடு பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார்.

இன்று வரை ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் ஏற்பாடு செய்வது எனப் பல்வேறு நல உதவிகளைத் தொடர்ந்து செய்து வரும் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது ரசிகர்கள், அவரால் உதவி பெற்றவர்கள் பல்வேறு விஷயங்களைச் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில், சமீபத்தில் ஆஃப்ரிக்க நாட்டிலேயே உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோவுக்கு மிதிவண்டியில் பயணப்பட்டு அடைந்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் உமா சிங். மேலும் தனது இந்த வெற்றிச் சாதனையை நடிகர் சோனு சூட்டுக்குத் தான் அர்ப்பணிப்பதாகவும் கூறியுள்ளார்.

"என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு நிஜ நாயகனைப் பார்த்தேன். அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கடினமான சூழலில் தனது வாழ்க்கையைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் நமது தேசத்தின் மக்களுக்காகத் தோள் கொடுத்தார். நீங்கள் தான் நம் நாட்டின் உண்மையான நாயகர் சோனு சூட் அவர்களே" என்று உமா சிங் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அவரது இந்தச் செயலால் நெகிழ்ந்து போன சோனு சூட், "மிகக் கடினமான ஒன்றை சாதிக்க வேண்டும் என்று அவர் சென்றதே எனக்குப் பெருமை. அவரது இந்த சாதனைக்கு அவரது கடின உழைப்பும், மன உறுதியுமே காரணம். அவரது வார்த்தைகளால் நான் அதிக நெகிழ்ச்சியாக உணர்கிறேன்.

நமது இளைய தலைமுறைக்கு இவர் ஒரு உந்துதல். இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு மன உறுதியைப் பார்க்கும் போது, நமது இந்திய இளைஞர்கள் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை எப்படியும் சாதிப்பார்கள் என்பதையே காட்டுகிறது. வாழ்த்துக்கள் உமா சிங். உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி" என்று பதிலளித்துள்ளார். \

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE