13 வருடங்களாக அப்பாவின் நிலை: கண்ணீர் விட்ட நயன்தாரா

By செய்திப்பிரிவு

தனது தந்தையின் உடல்நிலை குறித்து நடிகை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்படத்தின் புரமோஷனுக்காக விஜய் தொலைக்காட்சியில் ‘நெற்றிக்கண் ஸ்பெஷல்’ என்ற நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்டார்.

அதில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் நயன்தாரா பதிலளித்தார். அந்த வகையில் தனது குடும்பம் குறித்து முதல் முறையாக நயன்தாரா பேசியுள்ளார். அப்போது தனது அப்பா குறித்துப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார்.

''இதுவரை நான் என் அப்பா, அம்மா குறித்தோ என் குடும்பம் குறித்தோ எங்கும் பேசியது கிடையாது. என் வேலைகளில் அவர்கள் எப்போதும் தலையிட்டதும் கிடையாது. நான் என்ன படம் நடிக்கிறேன் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. என் படம் ரிலீஸானால் அம்மாவுக்கு போன் செய்து பார்க்கச் சொல்வேன்.

என் அப்பா குறித்து நான் எங்கும் பேசியதே இல்லை. அவர் விமானப் படையில் இருந்தவர். அவருக்குக் கடந்த 12,13 ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லை. அது என் தனிப்பட்ட விஷயம் என்பதால் எங்கும் இதைச் சொல்வதில்லை. 12, 13 ஆண்டுகளாகவே ஒரு குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டுமோ அப்படிப் பார்த்துக் கொள்ளும் நிலையில்தான் அப்பா இருக்கிறார். அவரை நான் ஒரு ஹீரோவாகத்தான் பார்த்திருக்கிறேன்.

தன்னுடைய வேலையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவரைப் பற்றி மிகவும் நல்ல விஷயங்களை மட்டுமே பிறர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் நடிக்க ஆரம்பித்து 2,3 ஆண்டுகளில் அவரது உடல்நிலை மோசமாகி விட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார். என்னால் ஒரு விஷயத்தை மாற்ற முடியுமென்றால் என் அப்பாவை நான் சிறு வயதில் பார்த்தபடி மாற்றுவேன்''.

இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE