கரோனா குறித்து சர்ச்சைக் கருத்து: டாம் ஹாங்ஸ் மகனுக்குக் குவியும் கண்டனங்கள்

நடிகர் டாம் ஹாங்ஸின் மகன் செட் ஹாங்ஸ் கரோனா குறித்துப் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2020ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் எனப் பல்வேறு நாடுகளில் ஏராளமான மக்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தனர். தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாவது அலையில் முதல் அலையை விட பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசியின் அவசியத்தை உலக நாடுகளின் அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸின் மகன் செட் ஹாங்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரோனா குறித்தும், தடுப்பூசி குறித்தும் தவறான கருத்துகளைத் தெரிவித்ததால் நெட்டிசன்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.

வீடியோ தொடங்கி சில நிமிடங்களுக்குத் தடுப்பூசிக்கு ஆதரவாகவும், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தவர், அடுத்த சில நொடிகளிலேயே தான் பேசிய கருத்துகளுக்கு முரணாகப் பேசினார்.

''எனக்குத் தொற்று ஏற்படவில்லை. இது ஒரு சாதாரண காய்ச்சல். இதிலிருந்து நாம் மீள வேண்டும். உங்களுக்குக் காய்ச்சல் இருந்தால் நீங்கள் வீட்டுக்குள் இருங்கள், நாங்கள் ஏன் இருக்க வேண்டும்? முகக்கவசம் அணிந்தே தனக்குச் சோர்வாகிவிட்டது'' என்று பேசினார். செட் ஹாங்ஸின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அவரது வீடியோவைப் பலரும் பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கரோனா முதல் அலையின்போது டாம் ஹாங்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா ஹாங்ஸ் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE