'பில்லா 2'வுக்கு நான் யோசித்த கதை வேறு: இயக்குநர் விஷ்ணுவர்த்தன் பகிர்வு

By செய்திப்பிரிவு

'பில்லா 2' படத்துக்காகத் தான் யோசித்து வைத்திருந்த கதை, வெளியான 'பில்லா 2'-வின் கதையை விட வித்தியாசமானது என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் பேசியுள்ளார்.

2007ஆம் ஆண்டு அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான் உள்ளிட்டோர் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான படம் 'பில்லா'. 1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பில்லா' படத்தின் நவீன வடிவமாக இது உருவானது. அந்த சமயத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அஜித், நயன்தாரா உள்ளிட்ட நடிகர்களுக்கும் முக்கிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

'பில்லா 2' அஜித் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியானது. 'உன்னைப் போல்' ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். பில்லா கதாபாத்திரத்தின் முன் கதையை இந்தப் படம் சொன்னது. ஆனால், முதலில் இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவதாகத்தான் இருந்தது. அப்போது அவரால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை என்பதால் சக்ரிக்கு வாய்ப்பு சென்றது.

தற்போது தான் எழுதிய 'பில்லா 2' கதை பற்றி விஷ்ணுவர்தன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

"ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஏற்கெனவே வெளியான 'பில்லா 2'வைப் போலத்தான் நானும் 'பில்லா 2' படத்துக்காக அந்தக் கதாபாத்திரத்தின் முன்கதையை யோசித்து வைத்திருந்தேன். ஆனால், நான் வேறொரு வித்தியாசமான கதையை வைத்திருந்தேன். நான் அதை அணுகியதும் அப்படித்தான். அப்போது நான் அதை அறிவித்தபோது பாலிவுட்டில் 'டான் 2' அறிவிக்கப்பட்டதே அதைப் போலத்தான் இருக்கும் என்று நினைத்தார்கள். அந்த நேரத்தில் 'டான் 2' இயக்குநர் ஃபர்ஹானுடன் நான் தொலைபேசியில் பேசினேன்.

ஜகதீஷ் கதாபாத்திரம் யார், பிரபு கதாபாத்திரத்துக்கும் பில்லா கதாபாத்திரத்துக்கும் ஏற்கெனவே இருந்த பரிச்சயம், பிரபு எப்படி இவரைத் துரத்த ஆரம்பித்தார், இருவருக்குமான உறவு என்ன, பில்லா என்கிற அந்தச் சின்னம் எப்படி வடிவம் பெற்றது, பில்லாவுக்கு ஏன் பெண்கள் மீது நம்பிக்கை கிடையாது, இப்படிப் பல கேள்விகளை வைத்துதான் அதை எழுத ஆரம்பித்தேன்.

ஆனால், உண்மையில் அந்தத் திரைக்கதையை நான் முழுமையாக முடிக்கவில்லை. அதனால்தான் என் கதையை அவர்களுக்குத் தர முடியவில்லை" என்று விஷ்ணுவர்தன் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE