இயக்குநர் பயணம் தொடங்கியது எப்படி? - அரவிந்த்சாமி பதில்

By செய்திப்பிரிவு

'நவரசா' ஆந்தாலஜியில் இயக்குநராக எப்படிப் பயணம் தொடங்கியது என்று அரவிந்த்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஆந்தாலஜி 'நவரசா'. 9 கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜியை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இதில் 'ரெளத்திரம்' என்ற கதையை இயக்கியிருந்தார் அரவிந்த்சாமி. அதுமட்டுமன்றி, கார்த்திக் நரேன் இயக்கியிருந்த 'ப்ராஜக்ட் அக்னி' என்ற கதையில் நடித்திருந்தார். இரண்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த வரவேற்பு தொடர்பாக அரவிந்த்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"90-களின் ஆரம்பத்தில் இருந்தே இயக்கத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. மணி சார் 'நவரசா' குறித்து என்னுடன் பேசியபோது நான் அதில் பங்கேற்க முடியுமா, எனக் கேட்டார். நான் அவரிடம் இயக்குநராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன். அது உன்னுடைய தேர்வுதான் என்று கூறிவிட்டார். இப்படித்தான் இயக்குநராக எனது பயணம் தொடங்கியது.

இயக்குநராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்தததுதான் அதற்குக் காரணம். அவர்கள்தான் என் வழிகாட்டிகள்.

ஏதாவது செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் அதுகுறித்துக் கவனித்துக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு வரும்போது, தயங்காமல் ஏற்றுக்கொண்டு செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் இப்படைப்பை உருவாக்கியது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

ஆந்தாலஜியில் கோபத்தை நான்தான் தேர்ந்தெடுத்தேன். அதற்குக் காரணம் வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய, கோபம் ஏற்றதாக இருக்குமென்று நினைத்தேன். ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையைக் கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்பிற்குப் பாராட்டுகள் கிடைத்து வருவது, மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது".

இவ்வாறு அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE