கோரிக்கையை மீறி ஒத்துழைப்பு: தயாரிப்பாளர்கள் சங்கம் Vs பெப்சி அமைப்பு

By செய்திப்பிரிவு

சிம்பு படத்துக்குக் கோரிக்கையை மீறி ஒத்துழைப்பு வழங்கியது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி அமைப்புக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் பிரச்சினை உண்டானது. இந்தப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராத காரணத்தால், இதை முன்வைத்து தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இரண்டிற்கும் மோதல் வெடித்துள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு பெப்சி ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இதனை மீறி 'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு ஒத்துழைப்பு அளித்தது பெப்சி. இதனால் சுமுகமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தினால் தயாரிப்பாளர் சங்கத்தினர் கடும் கோபமடைந்தனர். இதனை முன்வைத்து அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

* தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 06.08.2021 முதல், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.

* உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை பணியமர்த்திக் கொண்டு, திரைப்படத்திற்கு உண்டான படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம்

* தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி, தொடர்ந்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை அலட்சியப்படுத்தி வரும் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் கிடையாது.

* மேற்கண்ட தீர்மானங்களை மீறி படப்பிடிப்பு நடத்துவதற்கோ மற்றும் திரைப்பட தயாரிப்பு பணிகளைச் செய்வதற்கோ எந்த அமைப்பாவது இடையூறு ஏற்படுத்தினாலோ, பணி செய்பவர்களைத் தடுத்தாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலால், படப்பிடிப்பு ஏதேனும் பாதிக்கப்படுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE