முதல் பார்வை: சம்மர் ஆஃப் 92 (நவரசா)

By செய்திப்பிரிவு

நகைச்சுவை என்கிற ரசத்தை வைத்து ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள படம்தான் 'சம்மர் ஆஃப் 92'.

மலையாள நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான இன்னசண்டின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்று தொடக்கத்தில் சொல்லிவிடுகிறார்கள். யோகி பாபு இந்தக் கதையில் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வருகிறார். தான் படித்த பள்ளியின் ஆண்டு விழாவில் விருந்தினராகக் கலந்து கொள்கிறார். அப்போது சின்ன வயதில் நடந்த தனது சம்பவங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார். அது என்ன என்பதுதான் கதை.

யோகி பாபு, ரம்யா நம்பீசன், ஒய்.ஜி.மகேந்திரன், நெடுமுடி வேணு, அருள்தாஸ், மணிக்குட்டன் என்று பல பேர் இருந்தாலும் ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. முக்கியமாக நெடுமுடி வேணு மாதிரியான நடிகரை இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் ஏன் வீணடித்தார்கள் என்று தெரியவில்லை. இந்தக் கதையும், சொல்லப்பட்ட விதமும் பெரிய சுவாரசியத்தையோ, சிரிப்பையோ கொடுக்கவில்லை என்பது ஏமாற்றம்.

சின்ன வயது யோகி பாபு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சக்திவேல் நன்றாக நடித்துள்ளார். இவ்வளவு பெரிய நடிகர்களுக்கு மத்தியில் தனியாக கவனம் ஈர்க்கிறார். ராஜேஷ் முருகேசன் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் கதையோட்டத்துக்கு ஏற்ற வகையில் சரியாகப் பொருந்தியுள்ளன.

சிரிக்க வைப்பதுதான் மிகவும் கடினம் என்பார்கள். அது இந்தக் கதையின் மூலம் மீண்டும் நிரூபணமாகிறது. ஏனென்றால், இந்தக் கதையைப் பொறுத்தவரை உருவாக்கப்பட்ட விதம், காட்சிகளின் அழகியல், அதில் இருக்கும் நிறங்கள் என அனைத்துமே மகிழ்ச்சியை உணர்த்துவதாக உள்ளன. ஆனால், இயக்குநர் மனதில் நினைத்த ஹாஸ்யம் திரையில் காட்சிகளாகச் சரியாகக் கடத்தப்படவில்லை.

வசனம், காட்சி அமைப்புகள் என அனைத்திலும் நகைச்சுவை இருப்பது மாதிரியே இருக்கிறது. ஆனால் அது எங்கே என்று தேடிப்பிடித்துச் சிரிக்கத்தான் முடியவில்லை. பல நகைச்சுவை வெற்றிப் படங்களைக் கொடுத்த ப்ரியதர்ஷனுக்கு என்ன ஆனது என்று தொடர்ந்து யோசிக்க வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE