முதல் பார்வை: ரெளத்திரம் (நவரசா)

By செய்திப்பிரிவு

படத்தின் பெயருக்கு ஏற்றவாறு ரெளத்திரம்/கோபம் என்ற உணர்வை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு, அதனால் ஒரு கோபம், ரௌத்திரம் ஆட்கொண்டிருக்கும் கதாபாத்திரங்களைப் பற்றிய கதை. ஸ்ரீராம் ரித்விகா, அபினயா ஸ்ரீ, கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் அரவிந்த் சுவாமி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இந்தக் கதையின் தன்மை 80களின் நாவல்களை நினைவுபடுத்தினாலும் இந்தக் கதை சொல்லப்பட்ட விதம், சுவாரசியத்துக்குக் குறைவில்லாமல் இருக்கிறது. இந்தப் படத்தில் அனைவருமே அற்புதமாக நடித்திருந்தார்கள். குறிப்பிட்டுச் சொன்னால், ஸ்ரீராமின் நடிப்பு மிகச் சிறப்பு.

கீதா கைலாசம் ஒரு சிறந்த நடிகர் என்பதற்கு இந்தப் படம் ஒரு எடுத்துக்காட்டு. அம்மா கதாபாத்திரத்தில் மனதைத் தொடுகிறார். அதிலும், "பொண்ணுங்கனா தங்கம் மாதிரி” என்கிற வசனத்தை அவர் பேசும் விதம் நம் மனதைப் பிசைகிறது. பள்ளி மேடையில் அபினயாஸ்ரீ இதே வசனத்தின் நீட்சியைத் தன் பார்வையில் பேசுவதும் கதைக்கு அழுத்தம் சேர்க்கிறது. படத்தின் வசனகர்த்தாக்கள் மதன் கார்க்கி, செல்வா இருவருக்கும் பாராட்டுகள்.

ரித்விகாவின் நடிப்பும் சிறப்பு. ஆரம்பத்தில் ஒரே மாதிரியாக நடிக்கிறாரே என்று யோசிக்க வைத்தாலும், இறுதிக் காட்சியில் வெடித்து அழும்போது அதற்கான நியாயத்தைக் கொடுத்திருக்கிறார். அபினயா ஸ்ரீயின் நடிப்பும் இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. அந்த வயதுக்கான ஒரு அப்பாவித்தனம், கண்ணில் தெரியும் ஆர்வம் என நன்றாக நடித்துள்ளார்.

ரமேஷ் திலக், அழகம்பெருமாள் உள்ளிட்ட பலரும் படத்தில் இருக்கிறார்கள். ரஹ்மானின் இசையிலும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவிலும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் அழுத்தமாகப் பதிகிறது. படம் சொல்ல வரும் கருத்தையும், கருத்தாக, நீதி போதனையாகச் சொல்லாமல் கதாபாத்திரங்களின் வலி மூலமாகவே உணர்த்தியிருக்கும் இயக்குநர் அரவிந்த் சுவாமி ஜெயித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE