முதல் பார்வை: கிடார் கம்பி மேலே நின்று (நவரசா)

By செய்திப்பிரிவு

நவரசா ஆந்தாலஜியில் கடைசியில் இருந்தாலும், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் 'கிடார் கம்பி மேலே நின்று'. கெளதம் மேனன் இயக்கியுள்ள படம். இது சிருங்காரா, ரொமான்ஸ், காதல், அன்பு என்ற எமோஷனை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் என்பது தான் இதன் ப்ளஸ், மைனஸ் இரண்டுமே.

படத்தின் ப்ளஸ்: கெளதம் மேனன் பாணியிலான காதல் காட்சிகள் முழுக்க நிறைந்துள்ள படம். உரையாடல்களுக்கு நடுவில் பாடல் தொடங்குவதும், பாடலில் இருந்து உரையாடலுக்குச் செல்வதும், வசனங்கள் மூலமாகவே நிறைய காதலைக் கொட்டுவதும் என அவரது பாணி ஒவ்வொரு காட்சியிலும் பரவிக்கிடக்கிறது.

இந்த ஆந்தாலஜியில் நீண்ட நேரம் ஓடும் படம் இது தான். இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பை கெளதம் மேனன் உருவாக்கியுள்ளார் என்றால், இதைப் பார்க்க வைத்தது சூர்யாவின் இருப்பே. பெரிய மாஸ் ஹீரோ என்கிற இடத்தை மறந்து காதலில் வயப்பட்டிருக்கும் 32 வயது இளைஞராக அசத்தியிருக்கிறார்.

மேகாவை காதலிக்க அமெரிக்கா சென்ற 'வாரணம் ஆயிரம்' சூர்யா சில இடங்களில் தெரிந்தாலும், உடல் மொழியில் சில வித்தியாசங்களைக் கொண்டு வந்திருக்கிறார். கெளதம் மேனன் படங்களில் வரும் வழக்கமான நாயகியாக பிரயாகா. கதைக்கு தேவையான நடிப்பை கச்சிதமாக வழங்கியுள்ளார்.

கெளதம் மேனன் ஒரே மாதிரியான காதல் காட்சிகளுக்கு எப்படி விதவிதமாக வசனங்களை யோசிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படத்தின் வரும் வசனங்கள் கதைக்குப் பொருத்தமாக உள்ளது. அதுவும் ’’இந்த கேப்பில் ராஜா 5 பாட்டு போட்டிருப்பார்’’ என்பது போன்ற வசனங்கள் கவுதம் மேனனால் மட்டுமே சாத்தியம்.

க்ளோஸப் காட்சிகளில் உறுத்தாத பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, முன்னே பின்னே என்று சென்று வரும் ஊஞ்சலாட்டம் போன்ற படத்தொகுப்பு ஆகிய சிறப்புக்களைத் தாண்டி படத்தின் அடுத்த சிறப்பு. கார்த்திக்கின் இசை. ஒரு குறும்படத்துக்கு எதற்கு இவ்வளவு பாடல்கள் என்று பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் படம் பார்க்கும் போது அவற்றை நமக்கு உறுத்தலின்றி பொருத்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம் என்று தோன்றுகிறது.

படத்தின் சிறப்புகள் என்று சொன்ன அத்தனை விஷயங்களையுமே படத்துக்குப் பாதகங்களாகவும் வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்தப் படத்தின் ஒரே பிரச்சினை. முழுக்க முழுக்க கெளதம் மேனன் பாணி நிறைந்து தளும்புகிறது. வசனம், இசை, கதாபாத்திரங்கள் நிற்கும் விதம் வரை எல்லாவற்றிலும் நாம் பார்த்துப் பழக்கப்பட்ட, பழைய கெளதம் மேனன் தான் தெரிகிறார். கௌதம் மேனன் ரசிகர்களுக்கு இந்தப் படம் 'கிடார் கம்பி மேலே நின்று', அப்படி இல்லையென்றால் இந்த கிடாரின் இசையை உங்கள் காதும், மனதும் ஏற்காது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE