இதுவே ஒரு வெற்றிதான்! - இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு ஷாரூக்கான் ஊக்கம்

By செய்திப்பிரிவு

இதுவே ஒரு வெற்றிதான் என்று ஒலிம்பிக் போட்டியில் தோல்வியுற்ற இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு ஷாரூக்கான் ஊக்கம் அளித்துள்ளார்.

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் தங்களுடைய திறமைகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் விளையாட்டுத் திறனைப் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.

அதிலும், ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. கடுமையாகப் போராடித் தோற்றது. பின்பு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து அணியிடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கடுமையாகப் போராடி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. ஆட்டம் முடிவுக்கு வந்தவுடன் வீராங்கனைகள் மைதானத்தில் அழுதார்கள். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்திய மகளிர் அணியின் ஆட்டத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாரூக்கான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இதயம் உடைந்துவிட்டது! ஆனால், நாம் தலைநிமிர்வதற்கான அனைத்துக் காரணங்களும் இருக்கின்றன. நன்றாக விளையாடினீர்கள் இந்திய மகளிர் ஹாக்கி டீம். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரையும் நீங்கள் அனைவரும் ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள். இதுவே ஒரு வெற்றிதான்".

இவ்வாறு ஷாரூக்கான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE