மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழா: முக்கிய விருதுப் பரிந்துரைகளில் ’சூரரைப் போற்று’

By பிடிஐ

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழா விருதுகள் 2021ல், ’சூரரைப் போற்று’ திரைப்படம் முக்கியப் பிரிவுகளில் போட்டியிடுகிறது.

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவின் 12-வது பதிப்பு திரையரங்குகளிலும், இணையம் மூலமாகவும் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் விருது வழங்கும் விழா இணையம் மூலமாக மட்டும் நடைபெறுகிறது.

இந்த விழாவில் போட்டியிடவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படப் பிரிவில் தமிழின் ’சேத்து மான்’, ’நஸீர்’, மலையாளத்தின்’ தி கிரேட் இண்டியன் கிச்சன்’ உள்ளிட்ட படங்கள் போட்டியிடுகின்றன.

சிறந்த இயக்குநர் பிரிவில் ’சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயர் பரிந்துரையில் உள்ளது. சிறந்த நடிகர் பிரிவில் சூர்யா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ’நஸீர்’ திரைப்படத்தில் நடித்த கௌமாரனேவும் இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகை பிரிவில் ’ஷெர்னி’ திரைப்படத்துக்காக வித்யா பாலன், ’தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்துக்காக நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் வெப் சீரிஸ்களுக்கும் இம்முறை விருது வழங்கப்படவுள்ளது. சிறந்த சீரிஸ், சிறந்த நடிகர், நடிகை என 3 பிரிவுகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகை பிரிவில், ’ஃபேமலி மேன் 2’வில் நடித்த சமந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த விருது விழாவில் சிறந்தத் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்படும் படம், ஆஸ்திரேலிய அகாடமி விருதுகளில் பரிந்துரைக்கப்படத் தானாகத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE