'ஜெய்பீம்' படத்தின் கதைக்களம் என்ன?

By செய்திப்பிரிவு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய்பீம்' படத்தின் கதைக்களம் என்ன என்பதை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெய்பீம்'. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் உள்ள சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூர்யா. இது நீதியரசர் சந்துரு எதிர்கொண்ட ஒரு வழக்கைப் பின்னணியாகக் கொண்ட படமாகும்.

நவம்பரில் 'ஜெய்பீம்' ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 'ஜெய்பீம்' படத்தின் கதைக்களத்தையும் குறிப்பிட்டுள்ளது.

''இது பழங்குடியினத் தம்பதியரான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராஜகண்ணு போலீஸாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனைத் தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே 'ஜெய்பீம்' கதை'' என்று அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

'ஜெய்பீம்' படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE