தயாரிப்பாளர் சங்கங்கள் இணைகின்றனவா? - மீண்டும் சர்ச்சை

By செய்திப்பிரிவு

தயாரிப்பாளர் சங்கங்கள் மீண்டும் இணைவதாகத் தகவல் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் தேனாண்டாள் முரளி தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம், உஷா ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை இப்போது வரை நிறைவு பெறவில்லை. இது தொடர்பாக மைக்கேல் ராயப்பன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு சிம்புவின் படம் வெளியாகும்போதும், இந்தப் பிரச்சினை பெரிதாக வெடிக்கும்.

சில தினங்களுக்கு முன்பு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளியைக் கடுமையாக விமர்சித்து தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் ஆடியோ பதிவொன்றை வெளியிட்டார். இது திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்த ஆடியோ பதிவில் ஒருமையில் வேறு பேசியிருந்தார்.

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 4) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் - தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை விரைவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக சிங்காரவேலனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "சங்கங்கள் பிரிந்திருப்பதால் எதுவுமே செய்ய முடியவில்லை. குற்றச்சாட்டுகளை நான்தான் வைத்தேன். அது பொதுவெளியில் வருவதற்குக் காரணமே சங்கங்கள் பிரிந்திருப்பதால்தான். ஒன்றாக இருந்திருந்தால் பேசி முடித்திருப்போம். பெருவாரியான நிர்வாகிகளும் சங்கங்கள் இணைப்புக்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். டி.ராஜேந்தர் சார் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. 7 நிர்வாகிகள் சேர்ந்துதான் சங்கம் தொடங்கினோம். அதில் 5 பேர் சங்க இணைப்புக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கங்கள் இணைவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஜே.சதீஷ்குமார் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், "இந்தத் தகவல் உண்மையில்லை. வெறும் வதந்தி. யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE