விபத்து நடந்தது எப்படி? - நடிகை யாஷிகா ஆனந்த் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்த விபத்து குறித்து நடிகை யாஷிகா பேட்டியளித்துள்ளார்.

கடந்த ஜூலை 24 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதிக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் மருத்துவமனையில் இருந்த வீடு திரும்பிய யாஷிகா விபத்து குறித்து 'தி இந்து' ஆங்கில இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில் விபத்து எவ்வாறு நடந்தது என்று விவரித்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

''பவானி என்னுடைய ஆறு வருடத் தோழி. அவர் ஒரு மாடலாக இருந்தார். ஆனால், அதிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் தன் பெற்றோருடன் நேரத்தைச் செலவிட இந்தியா வந்திருந்தார். பின்னர் என்னைப் பார்க்க சென்னை வந்தார்.

ஜூலை 24 அன்று இரவு நாங்கள் நான்கு பேர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இரவு உணவு சாப்பிடச் சென்றுவிட்டு அங்கிருந்து 11 மணியளவில் சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது. காரை ஓட்டியது நான்தான். ஆனால், நிச்சயமாக நான் வேகமாக ஓட்டவில்லை.

சாலை மிகவும் இருட்டாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் நான் காரை மோதிவிட்டேன். அதில் மோதிய வேகத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து மூன்று முறை உருண்டது. எனக்கு அருகில் பவானி அமர்ந்திருந்தார். அவர் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. காற்று வாங்குவதற்காக ஜன்னல் கண்ணாடியையும் திறந்து வைத்திருந்தார். எனவே கார் விபத்துக்குள்ளானபோது அவர் ஜன்னலுக்கு வெளியே சென்று விழுந்தார். அவரது தலையில் பலமாக அடிபட்டது. மற்ற மூவரும் காருக்கு உள்ளேயேதான் இருந்தோம். ஆனால், காரின் கதவுகள் லாக் ஆகி விட்டதால் எங்களால் வெளியேற முடியவில்லை. பின்னர் சன் ரூஃப் கண்ணாடியைத் திறந்து வெளியேறினோம்.

சில நிமிடங்களிலேயே அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. என்னால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. என் உடல் ழுழுவதும் செயலிழந்து விட்டதைப் போல உணர்ந்தேன். நாங்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். நான் குணமடைந்த பின்னரே பவானி இறந்த செய்தி என்னிடம் சொல்லப்பட்டது.

நான் ஒன்றை அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். நான் அன்று குடிக்கவில்லை. எந்தவிதப் போதைப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. அது ஒரு சிறு கவனச் சிதறலால் ஏற்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து. அதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு மிகப்பெரிய குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொண்டிருக்கிறது. அதோடுதான் நான் இனி என்றென்றும் வாழவேண்டும். நான் உயிர் பிழைத்திருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். ஆனால், அதற்காக சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிச் சொல்லப்படும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் இல்லை. நான் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக சமூக வலைதளங்களில் ஒரு போலி வீடியோ கூட வலம் வருகிறது''.

இவ்வாறு யாஷிகா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE