'கூகுள் குட்டப்பா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By கா.இசக்கி முத்து

கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடித்துள்ள 'கூகுள் குட்டப்பா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்'. இதில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகள் கிடைத்தன.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரித்து, நடித்து வருகிறார் கே.எஸ்.ரவிகுமார். 'கூகுள் குட்டப்பா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

'கூகுள் குட்டப்பா' படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் சுராஜ் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடித்துள்ளனர். நாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தென்காசியில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சியை மட்டும் விரைவில் படமாக்கவுள்ளது. இதற்காகத் திட்டமிட்டு வருகிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்வி, இசையமைப்பாளராக ஜிப்ரான், பாடலாசிரியராக மதன் கார்க்கி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE