நண்பர்கள் தயாரிக்கும் படத்தில் இணையும் விஷால்

By செய்திப்பிரிவு

நண்பர்கள் நந்தா மற்றும் ரமணா இணைந்து தயாரிக்கும் படமொன்றில் நடிக்கவுள்ளார் விஷால்.

து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தைத் தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. பெரும்பாலான காட்சிகளை அங்கேயே படமாக்கி முடித்துவிட்டார்கள். இதில் பாபுராஜ், யோகி பாபு, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார்.

தற்போது சென்னையில் நடப்பது மாதிரியான கதை என்பதால், ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை நம்பவைக்கும் வகையில் சில காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஷாலின் அடுத்த படத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நண்பர்கள் தயாரிப்பில் நடிக்க முடிவு செய்துள்ளார் விஷால். நடிகர் சங்கத் தேர்தல் மற்றும் அதன் பணிகளில் விஷாலுக்கு பக்கபலமாக பல்வேறு நடிகர்கள் செயல்பட்டனர். இதில் விஷாலுக்கு மிக நெருக்கமாக வலம் வந்தவர்கள் நந்தா மற்றும் ரமணா. இப்போதும் விஷாலுக்கு நெருங்கிய நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

தற்போது நந்தா மற்றும் ரமணா இருவரும் இணைந்து தயாரிக்கும் படமொன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார் விஷால். இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர். இதில் விஷால் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE