ஒரு புதுமையான கனவு முயற்சி: ‘ப்ராஜக்ட் அக்னி’ குறித்து கார்த்திக் நரேன்

By செய்திப்பிரிவு

'நவரசா' ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள ‘ப்ராஜக்ட் அக்னி’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் பகிர்ந்துள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

இதில் ‘ப்ராஜக்ட் அக்னி’ என்ற படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இதில் அரவிந்த் சாமி, பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்கியது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியதாவது:

'' ‘நவரசா’ படத்தைப் பொறுத்தவரை அதன் அத்தனை அம்சங்களுமே எனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத்தந்த பெரிய பயணம் ஆகும். இப்படம் சயின்ஸ் பிக்சன் வகையில் ஒரு புதுமையான கனவு முயற்சி. இப்படத்துக்காக முதலில் நான் அரவிந்த் சாமி மற்றும் பிரசன்னா ஆகிய இருவரை தொடர்புகொண்டேன். அவர்கள் இருவருடனும் ஏற்கெனவே நான் பணிபுரிந்துள்ளேன்.

அரவிந்த சாமியைப் பொறுத்தவரை அவர் படப்பிடிப்பில் காட்சியைத் தனது நடிப்பின் மூலம் நிறைய மேம்படுத்துவார். கதாபாத்திரங்களைச் சரியாக வெளிப்படுத்தும் பொருட்டு, அரவிந்த் சாமி, பிரசன்னா, பூர்ணா ஆகியோர் ஒரு குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டனர். அனைத்து நடிகர்களும் இத்திரைக்கதையில் அழகாகப் பொருந்தியுள்ளார்கள். இதனால் படம் மிக அற்புதமாக வந்துள்ளது''.

இவ்வாறு கார்த்திக் நரேன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE