வேணு அரவிந்த் கோமாவில் இல்லை: சக நடிகர் அருண் தகவல்

By செய்திப்பிரிவு

நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை என்றும், தீவிர சிகிச்சையில் அவர் தேறி வருகிறார் என்றும் சின்னத்திரை நடிகர் அருண் குமார் ராஜன் கூறியுள்ளார்.

'பகல் நிலவு', 'அலைபாயுதே', 'நரசிம்மா' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் வேணு அரவிந்த். சின்னத்திரையில் 90களிலிருந்தே நடித்துவரும் வேணு அரவிந்த் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் பல தொடர்களில் நடித்துள்ளார்.

'அலைகள்', 'ஆடுகிறான் கண்ணன்', 'செல்வி', 'அரசி', 'வாணி ராணி' உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கும் வேணு அரவிந்த், பிரபலமான தமிழ் சின்னத்திரை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வென்றவர்.

அண்மையில் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுத் தொடர்ந்து நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு இரண்டிலிருந்து மீண்டுவிட்டதாகவும், சமீபத்தில் மூளையில் நடந்த அறுவை சிகிச்சையால் தற்போது மருத்துவமனையில் கோமாவில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

'வாணி ராணி' தொடரில் வேணு அரவிந்துடன் நடித்த இளம் நடிகர் அருண் குமார் ராஜன் இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

"பல தவறான செய்திகள் பரவிவருவது பலரை பாதிக்கிறது. நான் இப்போதுதான் வேணுவின் மனைவி ஷோபாவைச் சந்தித்துப் பேசிவிட்டு வருகிறேன். உங்கள் அனைவரிடமும் என்ன நிலவரம் என்று சொல்ல வேண்டுமென அவர்களும் விரும்புகிறார்கள்.

வேணு அரவிந்த் கோமாவில் இல்லை. கடந்த 7-8 மாதங்களாக அவருக்கு உடல்நலம் சரியில்லை. அவரது குடும்பமும், அவரும் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வந்திருக்கின்றனர். அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது.

இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறார். சிகிச்சைக்கு நல்ல பலன் இருக்கிறது. அவர் குடும்பத்தினர் அனைவரும் அவர் மீண்டுவிடுவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

விரைவில் அவர் வீடு திரும்புவார். அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். எதிர்மறையான விஷயங்களைப் பரப்பாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். அவர் கோமாவில் இல்லை என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். தயவுசெய்து புரளிகளைப் பரப்பாதீர்கள். விரைவில் அவர் நம்முடன் மீண்டும் இணைவார். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று அருண் குமார் இந்தக் காணொலியில் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE