புகைப் பிடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் அல்லு அர்ஜுன்

By செய்திப்பிரிவு

புகைப் பிடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு ஒன்றைத் தொடங்கியுள்ளார் அல்லு அர்ஜுன்.

இந்தியாவில் கரோனா 2-வது அலை என்பது படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனாலும், இன்னும் 22 மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் இன்று (ஜூலை 27) தெரிவித்துள்ளார். இதில் புகைப் பிடிப்பவர்கள் கரோனா பாதிப்புக்கு ஆளாவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால், புகைப் பிடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு ஒன்றைத் தொடங்கியுள்ளார் அல்லு அர்ஜுன். மேலும் ரசிகர்கள் புகைப் பிடிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக அல்லு அர்ஜுன் கூறியிருப்பதாவது:

"புகைப் பிடிப்பதின் தீமைகளைக் குறித்து கவனத்தை ஈர்க்க விரும்பினேன். 90-களின் காலகட்டத்தில் மேற்கத்தியக் கலாச்சாரத்தால் நாம் ஈர்க்கப்பட்டபோது தான் புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்தக் காலத்தில் அது ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது.

தற்பொழுது 2021-ல் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் புகைப் பிடிக்கும் பழக்கம் உச்சத்தில் உள்ளது. இதற்கு மன அழுத்தமும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதை மாற்ற என்னால முடிந்த ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

கரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதாலும், மேலும் மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவதாலும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்பினேன்.

எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குப் புகைப் பிடிப்பதால் ஏற்படும் தீமைகளைக் குறித்து நான் எடுத்துரைத்து வருகிறேன். சிறிய அளவில் நாம் செய்யும் மாற்றம் கூட நம்மைச் சீரான மற்றும் ஆரோக்கியமான பாதைக்கு அழைத்துச் செல்லும் நான் நம்புகிறேன்".

இவ்வாறு அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

தற்போது சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அல்லு அர்ஜுன். இரண்டு பாகங்களாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE