வெப் தொடர்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை: நடிகர் சுனில் பால் வேதனை

By செய்திப்பிரிவு

‘ஃபேமிலி மேன்’, ‘மிர்ஸாபூர்’ உள்ளிட்ட வெப் தொடர்கள் குறித்து நடிகர் சுனில் பால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் படங்களில் நடிக்கவைத்து, பின்னர் அப்படங்களை செல்போன் செயலி மூலம் விநியோகம் செய்து கோடி கோடியாய் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, அவரது உதவியாளர் ரயான் தோப்ரே உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

பாலிவுட் உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரம் குறித்துப் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நகைச்சுவை நடிகரான சுனில் பால் இந்த விவகாரம் குறித்துக் கடுமையான விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

''என்ன நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது. அது மிகவும் அவசியமான ஒன்று. சென்சார் இல்லை என்பதை சில வெப் சீரிஸ்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இப்போது எடுக்கப்படும் வெப் சீரிஸ்களைக் குடும்பத்தோடு வீட்டில் பார்க்க முடிவதில்லை.

குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் மனோஜ் பாஜ்பாய் போன்ற ஒரு சிலரை நான் மிகவும் வெறுக்கிறேன். அவர் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், அவர் போன்ற ஒரு மோசமான மனிதரை நான் கண்டதில்லை. உங்களுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் குடும்பப் பார்வையாளர்களுக்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் வெப் சீரிஸில் மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவில் இருக்கிறார். மைனர் பெண் ஒருவர் தன் காதலனைப் பற்றிப் பேசுகிறார். குட்டிப் பையன் ஒருவன் வயதுக்கு மீறி நடந்து கொள்கிறான். ஒரு குடும்பம் இப்படித்தான் இருக்குமா? என்ன நடக்கிறது? இன்னும் நீங்கள் காட்ட என்ன மிச்சமிருக்கிறது?

அதேபோல மோசமான மனிதர்களால் எடுக்கப்பட்ட‘மிர்ஸாபூர்’ என்று ஒரு தொடர். ஆபாசப் படங்களைப் போல இவற்றையும் தடை செய்ய வேண்டும். ஆபாசம் என்பது நமக்குக் காட்டப்படுவது மட்டுமல்ல, நம்மைத் தவறான வழியில் சிந்திக்க வைப்பதுமே ஆகும். ஆபாசப் படம் எடுத்த நபர்களைக் கைது செய்த மும்பை காவல்துறைக்கு என்னுடைய பாராட்டுகள்''.

இவ்வாறு சுனில் பால் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE