'சார்பட்டா பரம்பரை' அனுபவங்கள்: 'டான்ஸிங் ரோஸ்' ஷபீர் பகிர்வு

By செய்திப்பிரிவு

டான்ஸிங் ரோஸ், கடந்த சில நாட்களாக நெட்டிசன்கள் பெரும்பாலும் பயன்படுத்திய அல்லது பார்த்த வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இவர். முக்கிய வில்லனும் இல்லை, நாயகனின் பக்கமும் இல்லை. ஆனாலும் ஏன் இந்தக் கதாபாத்திரம் இவ்வளவு பிரபலமடைந்துள்ளது? இந்தக் கதாபாத்திரம் குறித்து விவரித்துச் சொன்னால் படம் பார்க்காத பலருக்கும் சுவாரசியம் கெட்டுப் போகும்.

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஷபீரின் கதையே இன்னொரு 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் எடுக்கும் அளவுக்கு போராட்டங்கள் நிறைந்தது.

சென்னையைச் சேர்ந்த தியேட்டர்/ நாடக நடிகர் ஷபீர் கல்லரக்கல். 'நெருங்கி வா முத்தமிடாதே' திரைப்படம் மூலம் 2014ஆம் ஆண்டு பெரிய திரையில் அறிமுகமானவர். 'அடங்க மறு', 'பேட்ட', 'டெடி' உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

உடற்பயிற்சி, தற்காப்புக் கலைகளைத் தீவிரமாகப் பயின்று வரும் இவர் பார்க்கோர் என்கிற ஓடும் பயிற்சியிலும் திறமையானவர். 2019ஆம் ஆண்டு 'சார்பட்டா பரம்பரை'க்கான நடிகர்கள் தேர்வில் ஷபீர் கலந்துகொண்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட காட்சி, டான்ஸிங் ரோஸ் என்கிற கதாபாத்திரம் தோல்வியடைந்தபின் என்ன செய்கிறான் என்பதே. படத்தில் இந்தக் காட்சி இல்லையென்றாலும் இதுவே அவர் தேர்வாகக் காரணமாக இருந்தது.

படம் வெளியானதும் எக்கச்சக்க பாராட்டு அழைப்புகள், செய்திகள் என்று திக்குமுக்காடிப் போயிருக்கும் ஷபீர், 'சார்பட்டா பரம்பரை' குறித்த தனது அனுபவத்தைப் பகிர்கிறார்.

"எனது குத்துச்சண்டக் காட்சியின் படப்பிடிப்பின்போது ஒரு முறை கூட நான் உட்காரவேயில்லை. அன்று எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிக்கு நாங்கள் ஒத்திகையும் பார்க்கவில்லை. அங்கேயே பேசிப் பேசி மெருகேற்றியதுதான். எனக்கு பாக்ஸிங் பயிற்சி இருந்தது. ஆனால், அந்தப் பாணியை ஒத்திகை பார்க்கவில்லை. அந்தக் கதாபாத்திரமாகவே நான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அது நடந்தது. இப்போது நான் அதைச் செய்ய முயன்றால் அது வேறு மாதிரிதான் வரும்.

அந்தக் கதாபாத்திரம் இதுவரை தோல்வியையே சந்தித்ததில்லை. ஓய்வில் இருக்கிறார். மீண்டும் அவர் ஆட வரும்போது அனாயாசமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும். நான் சிலம்பம் - கிக் பாக்ஸிங் - முவா தாய் ஆகிய மூன்று தற்காப்புக் கலைகளும் கலந்து காலடிக் குத்து வரிசை என்கிற கலையைக் கற்று வருகிறேன். திரு மாஸ்டர் அனைத்து நடிகர்களுக்கும் பாக்ஸிங் பயிற்சி தந்தார். நான்தான் கடைசியாக இணைந்த நடிகன். ஆனால், என் உடல் திடமாக இருந்ததால் என்னால் எளிதில் கற்க முடிந்தது.

இந்தப் படத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குத்துச்சண்டை பாணி இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் பா.இரஞ்சித் மிகவும் கவனமாக இருந்தார். ஆர்யா கதாபாத்திரத்தின் பாணி முகமது அலியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதே போல வேம்புலி கதாபாத்திரத்துக்கு மைக் டைஸன், டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்துக்கு பிரிட்டன் வீரர் நஸீம் ஹமீத் என மேற்கோள் இருந்தது.

நஸீம் ஹமீத் ஆடுவதே நடனம் போல இருக்கும். அதை வெறும் அடிப்படையாக மட்டுமே வைத்துக்கொண்டு எனது சொந்தப் பாணியை நான் உருவாக்கினேன். வட சென்னையில் இருக்கும் முன்னாள் குத்துச்சண்டை வீரர்கள் சிலர் படத்தில் நடித்திருந்தனர். அவர்களிடமிருந்தும் குறிப்புகள் பெற்றுக்கொண்டேன்" என்கிறார் ஷபீர்.

ஊரடங்குக்கு முன்னும் பின்னும்தான் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. எனவே, படப்பிடிப்பு இல்லாமல் இருந்த காலகட்டத்திலும் தன் உடற்கட்டு மாறாமல் அப்படியே வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் ஷபீர் உள்ளிட்ட அத்தனை நடிகர்களும் இருந்திருக்கின்றனர். ஆனால், ஷபீர் தனிப்பட்ட முறையில் பலருக்கு உடற்பயிற்சி வழிகாட்டியாக, பயிற்சியாளராக இருந்து வருகிறார். எனவே வீட்டிலேயே உடற்பயிற்சி மற்றும் சில தற்காப்புக் கலைகளைப் பயிற்சி செய்து தன் உடற்கட்டைப் பேணியுள்ளார்.

"ஆனால், முதல் நாள் படப்பிடிப்பு எனக்குக் கடினமாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் நான் மீண்டும் வீட்டுக்கு வந்து, எனது வேகத்தைக் கூட்டப் பயிற்சி எடுத்தேன். அந்தக் கதாபாத்திரத்தின் மன ஓட்டம் வேகமாக இருக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன்.

தியேட்டரில் எனக்குக் கிடைத்த அனுபவம், மருத்துவமனைகளில் கோமாளி வேஷம் போட்டது என எல்லாம் எனக்குக் கை கொடுத்தது. அங்கு படப்பிடிப்பில் ரசிகர்களாக இருந்தவர்களைக் கைதட்ட வைக்க முயற்சி செய்தேன். இயக்குநரும், சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவும் நான் சொந்தமாகச் சில விஷயங்கள் சேர்க்கலாம் என்பதற்கு சம்மதித்தார்கள். அதிலும் 70களின் மெட்ராஸில் இந்தக் கதை எனும்போது அற்புதமான அனுபவமாக இருந்தது. எனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க உதவியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் 14-15 மணி நேரம் படப்பிடிப்பு என்பது உடல்ரீதியாகப் பெரிய சவாலாக இருந்தது" என்று கூறுகிறார் ஷபீர்.

- கௌரி (இந்து ஆங்கிலம்) | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE